அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கூட்டத்தில் முடிவு
07.03.2023 அன்று, மாலை 4.30 மணியளவில், பெரியார் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், தலைவர் க.சிவகாமி, வழக்கறிஞர்கள் மு.பூபால், ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.இராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் இரா.அந்தோனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலாளர் ப.அமுதவன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் கழகம் மண்டல தலைவர் வே.அன்பரசன், திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பாளர் இர.தந்தைபிரியன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், பழங்குடியினர் விடுதலை இயக்கம் மாநிலச் செயலாளர் மா.ஏகாம்பரம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் இராஜா, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் தலைவர் எம்.முகமது உமர் பாரூக், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் எம்.ஒய்.பலுலுல்லா, இராவணன் படிப்பகம் பொறுப்பாளர் இர.அபிமன்னன், தொல்காப்பியர் லஞ்ச ஒழிப்பு இயக்கம் தலைவர் இராஜாராமன், இயற்கை கலாச்சார புரட்சி இயக்கம் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், தலித் பேந்தர் ஆப் இந்தியா மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் த.சிகாமணி, இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம் தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஒருங்கிணைப்பாளர் இரா.பாபு, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் செயலாளர் இரா.இராஜேந்திரன், சமூக ஆர்வலர் கு.கலைப்புலி சங்கர் உட்பட கட்சி, சமூக அமைப்புத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1) கடந்த 25.02.2023 அன்று நள்ளிரவு காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் அருகில் மீன் பிடிக்கச் சென்ற பழங்குடி இருளர் இருவர், விழுப்புரம் மாவட்டம் குமாரப்பாளையம் அருகிலுள்ள ஆறுபுளியமரம் கே.வி.பி. செங்கல் சூளையில் இருந்து என பழங்குடி இருளர்கள் செங்கேணி, அப்பு, அய்யனார் (எ) அய்யப்பன், காட்டுப்பூனை (எ) செங்கேணி, கட்டப்பா (எ) கன்னியப்பன், சங்கர், இரமேஷ் ஆகிய 7 பேரை பிடித்துச் சென்று 28.02.2023 வரை காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் சட்ட விரோத காவலில் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா உட்பட காவல் அதிகாரிகள், போலீசார் லத்தி, கடப்பாரை ஆகியவற்றால் கடுமையாக தாக்கி உள்ளனர். பச்சை மிளகாய் சாறை பிழிந்து கண்களில் விட்டும், முகத்தில் தேய்த்தும் சித்தரவதைச் செய்துள்ளனர். மேற்சொன்ன கே.வி.பி. மற்றும் செல்லிப்பட்டு செங்கல் சூளையில் பிடிக்கச் சென்ற போது ராஜி என்ற பெண்ணை முட்டிப் போட வைத்து அடித்து உதைத்து ஜாக்கெட்டை கழற்றச் சொல்லி மார்பில் அடித்துள்ளனர். மேலும், பெண்கள், பிள்ளைகளை என பலரையும் அடித்துள்ளனர். கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை ஒத்துக் கொள்ள சொல்லி மேற்சொன்ன சித்தரவதைகளைச் செய்துள்ளனர். மேலும், நகை அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று திருட்டு நகைக் கொடுத்தாக சொல்ல சொல்லி துன்புறுத்தி உள்ளனர்.
பின்னர், மேற்சொன்ன இருளர்கள் மீது கண்டு பிடிக்க முடியாத திருட்டு வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதில் இருவர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என்பதால் நீதிபதி போலீசாரைக் கடுமையாக எச்சரித்து இருவரையும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பவில்லை. பின்னர், இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். மற்றவர்கள் நீதிமன்ற காவலில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போலீசார் பழங்குடி இருளர்கள் வீடுகளில் இருந்து வெள்ளி கொலுசு, வெள்ளி குருமாத், நகை அடகு வைத்த ரசீது, மூன்று டச்சு செல்போன்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மயிலம் காவல் நிலையப் போலீசார் மேற்சொன்ன இருளர்கள் மீது இரண்டு திருட்டு வழக்குகள் போட்டுள்ளனர். பழங்குடி இருளர்கள் மீது போடப்பட்ட இவ்வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் ஆகும்.
எனவே, காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர்கள் மீதான சட்டவிரோத காவலில் கொடும் சித்திரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடி இருளர்கள் என்பதால் குற்றமிழைத்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சரண்யா உட்பட காவல் அதிகாரிகள், போலீசார் என அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
4) பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
5) இச்சம்பவம் குறித்து ஓர் உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அறிக்கை அளிப்பது.
6) உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் புதுச்சேரி காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவில்லை. புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் காவல்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
7) வரும் 13.03.2023 அன்று புதுச்சேரியிலும், 20.03.2023 அன்று விழுப்புரத்திலும் மேற்சொன்ன கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply