விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.02.2023) விடுத்துள்ள அறிக்கை:

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டுமென புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சென்ற 12.02.2023 அன்று விழுப்புரம் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் அரிகரன் (வயது 23) என்பவரை உருளையன்பேட்டை போலீசார் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் தற்போது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நேற்றைய தினம் (13.02.2023) விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், டி.ஜி.பி., எஸ்.எஸ்.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். அவர்கள் குற்றமிழைத்த போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதி கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் 2.00 மணியளவில் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அரிகரனிடம் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தி உள்ளனர். மேலும், அவரிடம் சில போலீசார் பெயர்களைச் சொல்லக் கூடாது எனக் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், ரவுடிகளை வைத்து மருத்துவமனை வெளியே இருந்த மாணவர்களையும் மிரட்டி உள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் எஸ்.எஸ்.பி. (சட்டம் ஒழுங்கு) அவர்களிடம் விடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.

குற்றமிழைத்த போலீசார் தொடர்ந்து தவறு செய்வதாலும், அவர்களால் பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கண்ணுற்ற சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் உடனையாக இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர்களை வழக்குப் புலன்விசாரணை முடியும் வரையில் புதுச்சேரியை விட்டு வேறு பகுதியில் தங்கியிருக்க உத்தரவிட வேண்டும்.

போலீசாரால் தாக்கப்பட்டவர் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர் என்பதால் தமிழக அளவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். குற்றமிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது இரு மாநிலப் பிரச்சனையாக உருவாகும் நிலை உள்ளது.

எனவே, சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்த சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*