மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.02.2023) விடுத்துள்ள அறிக்கை:
தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசு தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோள்படி கலைப் பண்பாட்டுத் துறையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் வளர்ச்சி சிறகம் ஒன்றைத் தொடங்கியது. ஆனால், இச்சிறகத்தின் சார்பில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இச்சிறகம் செயல்பாடின்றி முடங்கிப் போயுள்ளது.
வரும் மார்ச் மாதத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் வளர்ச்சி சிறகத்திற்குக் குறைந்தபட்சம் ரூபாய் 25 இலட்சம் நிதி ஒதுக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் வளர்ச்சி சிறகத்தை மீண்டும் செயல்பட வைக்க முடியும்.
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியில் கையொப்பமிட வேண்டும். அனைத்து அலுவலகக் கோப்புகளிலும் தமிழில் குறிப்பெழுத வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள துறைகளில், துறைகளுக்கிடையே அனுப்பப்படும் அனைத்து வகையான மடல்கள், குறிப்புகள், ஆணைகள், விளக்கங்கள் தமிழிலேயே எழுதப்பட வேண்டும்.
அனைத்து நிறுவனங்கள் குறிப்பாக வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு நிறுவனங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்.
கோயில்களில் தமிழில் வழிபாடு, குடமுழக்குப் போன்ற அனைத்தும் தமிழில் செய்திட அரசாணை வெளியிட வேண்டும். தமிழே கல்வி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி என அனைத்து நிலையிலும் தமிழை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கூறிய செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், ஆலோசனைக் கூறவும் தமிழ் மொழி வல்லுநர்கள், அறிஞர்கள் அடங்கிய குழு ஒன்றினை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு மேற்கூறிய தமிழ் மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply