மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதைத் தொடங்கி வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் இருசக்கர மோட்டார் வாகன நிலையங்கள் பல காலமாக வரைமுறையின்றி செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒழுங்குப்படுத்தி அரசுக்கு வருவாய் ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்கள் போக்குவரத்துக் காவல்துறையின் பரிந்துரையை ஏற்று இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதைத் தொடங்கி வைத்துள்ளார். இதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு இருசக்கர மோட்டார் வாகனத்திற்கு ஆண்டுக்கு ரூ.1000 வரி செலுத்த வேண்டும். இதனால், அரசுக்குப் போதிய வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் சராசரியாக 20 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இத்திட்டத்தினால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் அரசுக்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கும். அரசு சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியுள்ளது.
அதோடுமட்டுமல்லாமல், இருசக்கர மோட்டார் வாகன நிலையங்கள் நடத்த வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் காவல்துறைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம் வழங்கி ஒழுங்குபடுத்தியதை முழுமையாக வரவேற்பதுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply