மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2023) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி மீது செருப்பை வீசுங்கள் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் பாஜக ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவர் ‘கலை விழாவில் கலந்துகொள்ள 8ஆம் தேதியன்று ஏனாம் வரும் முதலமைச்சர் மீது செருப்பை வீசுங்கள்’ எனப் பேசியுள்ளது அநாகரீகத்தின் உச்சம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பெரும் மக்கள் செல்வாக்குப் பெற்ற, மூத்த அரசியல் தலைவரான முதலமைச்சர் ந.ரங்கசாமி மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு, அவருக்கு எதிராக ஏனாம் மக்களை வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களை விமர்ப்பது தவறல்ல என்பதோடு, அது ஜனநாயக கடமையாகும். ஆனால், இழிவுப்படுத்தும் நோக்கில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது அரசியல் நாகரீகமற்ற செயலாகும். இது மக்களிடையே பெரும் பதட்டத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரி முழுவதும் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.
எனவே, முதலமைச்சருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது உடனடியாக குற்ற வழக்குப் பதிவு செய்ய டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply