மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.12.2022) விடுத்துள்ள அறிக்கை:
பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு 124, புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு 90 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016 முதல் 2020 வரையில் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆசிரியர்களின் இடமாற்றம் முறைப்படி செய்யப்படவில்லை.
தற்போதைய கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்புக்கு வந்த பின்னர் ஆசிரியர்கள் இடமாற்றம் அவரது சொந்த விருப்பு வெறுப்பின்படியும், ஆட்சியாளர்களின் விருப்பப்படியும் மட்டுமே செய்யப்படுகிறது. வாய்மொழி உத்தரவு என்ற சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இடமாற்றம் செய்வதில் ஆசிரியர்களின் நலன் முற்றிலும் புறந்தள்ளப்படுவதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், மேற்சொன்ன தொடக்கப் பள்ளி ஆசிரியர் இடமாற்றலில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையே உறுதிப்படுத்துகிறது.
காரைக்காலில் 20 சதவீத ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் போது 124 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துவிட்டு 90 ஆசிரியர்களை மட்டும் அங்கு அனுப்புவதைக் கண்டித்து நேற்று காரைக்காலில் மக்கள் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் கருத்தை அறிந்து உடனடியாக இடமாற்ற கொள்கை (Transfer Policy) ஒன்றைக் கொண்டு வர வேண்டும். இடமாற்றம் செய்வதில் எந்த கொள்கையும் இல்லாததால்தான் பல்வேறு குளறுபடிகளும், ஊழல்களும் நடக்கின்றன.
எனவே, பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply