மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2022) விடுத்துள்ள அறிக்கை:
பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறை, நிகழ்கலைத்துறையில் உதவிப் பேராசிரியர்கள் 8 பேர் தற்காலிகமாக 5 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனம் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாகவும், புதுச்சேரி மண்ணின் மைந்தர்களைப் புறக்கணித்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், ஒரு உதவிப் பேராசிரியர் பணியில் நியமிக்கப்படும் போது பி.எச்.டி. படிப்பை முடிக்கவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் பணியில் இல்லாத பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குப் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாமல் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பி.வி.போஸ் தான் காரணம். இதில் பெரும் ஊழல், முறைகேடு நடந்துள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ., மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தலைமைச் செயலர் உள்ளிட்ட பலருக்கும் புகார் அனுப்பி உள்ளோம். மேலும், இதுகுறித்த விசாரணையும் நிலுவையில் உள்ளது.
பல்கலைக்கூடத்தின் முன்னாள் மாணவர் பாலாபழனி என்பவர் இச்சட்டத்திற்குப் புறம்பான உதவிப் பேராசிரியர் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த உதவிப் பேராசிரியர்களின் பதவிக்காலம் 18.10.2022 அன்றுடன் முடிவடிகிறது. இவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். புதுச்சேரி அரசின் உயரதிகாரிகள் நீட்டிப்பு வழங்க முடியாது எனக் கோப்பில் எழுதிவிட்டனர். நிதித்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நியமனம் செய்யாததால் இந்த உதவிப் பேராசிரியர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சரை அணுகி தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்குப் பணிநீட்டிப்பு பெற பொறுப்பு முதல்வர் முயற்சித்து வருகிறார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது உதவிப் பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்குவது பல்வேறு சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க கூடாது என வலியுறுத்துகிறோம்.
Leave a Reply