
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை:
பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசையும், கல்வித்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர் நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். இதுகுறித்து ஊடகங்களில் வந்த செய்திகளில் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் 1000 மாணவர்கள் படிக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை இப்பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால்தான் உள்கட்டமைப்பு வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறிப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.
என்.கே.சி. மேல்நிலைப் பள்ளியில் +1, +2 வகுப்புகளில் மொத்தம் 115 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளில் மாணவர்கள் சேராததால் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அவ்வகுப்புகளுக்கு 1 தலைமை ஆசிரியர், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 ஓவிய ஆசிரியர், 1 நூலகர் இன்னமும் பணியில் உள்ளனர். 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் 18 ஆசிரியர்கள் உள்ளனர். போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் வேலையே செய்யாமல் ஆசிரியர்கள் தண்டச் சம்பளம் பெற்று வருகின்றனர்.
சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய சட்டக் கல்லூரிக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இப்பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்குப் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களைக் குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை இயக்குநர் கடந்த 07.09.2022 அன்று உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பிய குறிப்பின் அடிப்படையிலேயே இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளிக்கு இடம்மாறி உள்ளனர்.
இதனிடையே, எவ்வித எழுத்து பூர்வமான உத்தரவு இல்லாமல் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை வெவ்வேறு பள்ளிகளுக்குத் தற்காலிகமாக வாய்மொழி உத்தரவு மூலம் கல்வித்துறை இணை இயக்குநர் இடமாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆசிரியர்கள் சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் இடமாற்றம்தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பொய்யாகக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிவிட்டுள்ளனர்.
என்.கே.சி. மேல்நிலைப் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மாணவர்கள் பயின்றுள்ளனர். அதற்கான உள்கட்டமைப்பு வசதி அப்பள்ளியில் உள்ளது. சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 500 மாணவிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.
மேலும், கல்வித்துறை இணை இயக்குநர் எதையும் சட்டப்படி செய்யாமல் வாய்மொழி உத்தரவு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதுதான் இதுபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாகும்.
மேலும், சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் உயிரைக் காக்கும் வகையில் கல்வித்துறை இயக்குநர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.
எனவே, புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி கல்வித்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
Leave a Reply