மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.07.2022) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி கல்வித்துறை இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை மூட முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளது.
மொத்தம் 630 மாணவர்கள் பயிலும் பள்ளியை மூட வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
+2 தேர்வில் 58 சதவீதம் தேர்ச்சிப் பெற்றதைப் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் முயற்சியால் 92 சதவீதமாக உயர்த்தி உள்ளனர்.
இந்திரா நகர் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து +1, +2 வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பெற்றோர்களுடன் ஊர்வலமாக சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்குப் பதிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளியை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது.
கல்வித்துறையில் லஞ்சம் கொடுத்து பதவிக்கு வந்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் அதிகாரி ஒருவர் இதுபோன்று தேவையில்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் தவறான செயல்பாடுகளுக்கு முதல்வரும், கல்வி அமைச்சரும் துணைப் போவதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது.
எனவே, இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை மூடுவதைக் கைவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரையும், கல்வி அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம்.
Leave a Reply