மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.06.2022) விடுத்துள்ள அறிக்கை:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனத் தலைமைச் செயலர் உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் உள்ளிட்டோரை அலுவல் ரீதியாக சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், அரசு செயலர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை நேரில் சந்தித்து ஆட்சிப் பொறுப்பில் ஓராண்டு நிறைவுப் பெற்றது போன்ற காரணங்களுக்காக பாராட்டுவது அரசியல் நடவடிக்கை ஆகும்.
ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான அரசு செயலர் ஒருவர் இதுபோன்று ஓராண்டு நிறைவுப் பெற்றதற்காக அதிகாரத்தில் இருப்பவர்களைச் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி உள்ளார். தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், அதிகாரம் மிக்க துறைகளைப் பெறவும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது அப்பட்டமான அரசியல் நடவடிக்கை ஆகும்.
மத்திய சிவில் சேவைகள் நடத்தை விதிகள் (The Central Civil Services (Conduct) Rules, 1964) பிரிவு 5(1)-இன்படி அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது எனக் கூறியுள்ளது. மேலும், இவ்விதிகளின்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
நல்லாட்சி (Good governance) என்பது அரசு உயரதிகாரிகள் நடத்தை விதிகளை மீறும்போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே அமையும்.
எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனத் தலைமைச் செயலர் சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தலைமைச் செயலருக்குப் புகார் மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply