சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, புதுச்சேரி படைப்பாளர் இயக்கத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன், ஆகியோர் இன்று (12.06.2022) விடுத்துள்ள கூட்டறிக்கை:
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கூடுதலான வசதிகள் செய்துகொடுக்க, சுண்ணாம்பாறு படகுக் குழாம் வளாகத்தில் 24 மணி நேரமும் உணவு, குளிர்பானம், மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. க.இலட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.
படகுக் குழாம் வளாகத்திற்குள் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படும் என்கிற அறிவிப்பு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பங்களாக சுற்றுலா வருகிறவர்களுக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்துவோடு பண்பாட்டுச் சீர்கேடுகளை உருவாக்கும். படகுக் குழாம் பகுதியில் சுற்றுலா பயணிகளைவிட அளவுக்கதிகமான மதுப்பிரியர்களின் கூட்டம்தான் அதிகரிக்கும். இதனால், சட்டம் ஒழுங்குச் சீர்குலையும்.
சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டம், குடியாட்டம், களியாட்டம் போன்ற கட்டுப்பாடற்ற சீரழிவுகளை வளர்த்து அதன் மூலம் பணம் ஈட்டுவது, மக்கள் நலன் சார்ந்த அரசுக்கு உகந்தது அல்ல. ஆகவே வளர்ந்துவருகிற இளம் தலைமுறையினரைத் தவறான திசை நோக்கிச் செல்ல அரசே வழிகாட்டுதல் கூடாது. குடித்துச் சீரழிந்து வருகிற பல குடும்பங்களை மேலும் சீரழிய அரசு துணைப்போகக் கூடாது. சுற்றலாப் பயணிகளும் நம் மக்கள் தான். அவர்கள் நலமும் பாதுகாப்பும் பேணப்படல் வேண்டும்.
ஆகவே, நாகரிகமான சுற்றுலா வளர்ச்சியை உருவாக்கிடவும், சுற்றுலாப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவும் அரசும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக, ஜனநாயக இயக்கங்களின் சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply