
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.05.2022) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்த போது அதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது போராடிய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் ரங்கசாமி மின்துறை தனியார்மயமாகாது என்று உறுதி கூறினார். அதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தற்போது மத்திய அரசுக்கு அடிபணிந்து புதுச்சேரி அரசு மின்துறையை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இது போராடிய மின்துறை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இழைத்த மாபெரும் துரோகமாகும்.
மின்துறை தனியார்மயமானால் அடிக்கடி பல மடங்கு மின் கட்டணம் உயரும். இதனைப் பொதுமக்கள் யாரும் கேள்விக் கேட்ட முடியாது. அதேபோல், மின்துறை ஊழியர்கள் அரசு ஊழியர் என்ற தகுதியை இழப்பர். இதனால், குறைந்த சம்பளம், ஓய்வூதியம் கிடையாது என்ற நிலை ஏற்படும்.
மேலும், ரயில்வே துறை, ஜிப்மர் போல் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களின் வேலைப் பறிபோய் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply