மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2022) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க முயற்சிப்பதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு யு.ஜி.சி. விதிகளின்படி பி.எச்.டி. முடித்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்று பி.வி.ஏ. / பி.எப்.ஏ. படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நுண்கலைத்துறைக்கு உதவிப் பேராசிரியர் பணிக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள்.
ஆனால், பல்கலைக்கூடத்தின் முதல்வர் பி.வி.போஸ், கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நுண்கலைத்துறைக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய முயற்சிக்கின்றனர். உள்ளூரில் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருப்போர் பலர் இருக்கும் போது வெளியூரில் இருந்து ஆட்களை நியமிக்க சட்டவிரோதமாக செயல்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கடந்த 18.04.2022 அன்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து அவரிடம் விளக்கினோம். இதன்பின்னர், முதலமைச்சர் கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை நேரில் அழைத்து நுண்கலைத்துறைக்கு விதிகளின்படி உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால், முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நுண்கலைத்துறைக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நாளை (27.04.2002) நேர்காணல் நடத்த உள்ளனர்.
எனவே, முதலமைச்சர் இதில் தலையிட்டு மேற்சொன்ன நேர்காணலைத் தள்ளி வைத்து, பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply