சமூக ஜனநாயக இயக்கங்கள் முதலமைச்சரிடம் மனு!
சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர், தூ.சடகோபன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராமமூர்த்தி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அர.அபிமன்னன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோர் கையெழுத்திட்டு முதலமைச்சரிடம் இன்று (18.04.2022) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை ஆகிய துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுண்கலைத் துறையில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளைப் பின்பற்றி வண்ண ஓவியக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture), பயன்பாட்டுக்கலை (Applied Arts) ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நிகழ்கலைத் துறையில் யு.ஜி.சி. விதிகளைப் பின்பற்றி இசை, நடனம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
நுண்கலைத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் யு.ஜி.சி. விதிகளின்படி பி.எச்.டி. (Ph.D.) பட்டம் பெற்றவர்கள் மற்றும் நெட் (NET), ஸ்லெட் (SLET) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
நுண்கலைத் துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படிதான் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள். மேலும், கடந்த காலங்களில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்கப்பட்டு, புதுவைப் பல்கலைக்கழக பிரதிநிதி அடங்கிய தேர்வுக்குழு (Selection Committee) மூலமே உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி நியமனம் செய்யாமல் விதிகளை மீறி யு.ஜி.சி. விதிகளின்படி நியமனம் செய்தால் உள்ளூரில் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்களிடம் உறுதியளித்தபடி பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற இதுவரையில் அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பான உரிய ஆவணங்களைத் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளோம்.
எனவே, தாங்கள் இதில் தலையிட்டு பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு வரும் கல்வியாண்டிற்கான ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறவும், நுண்கலைத் துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply