புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்..
புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராமமூர்த்தி, பூர்வீக குடிமக்கள் பேரவை செயலாளர் பெ.ரகுபதி ஆகியோர் இன்று (01.02.2022) விடுத்துள்ள கூட்டறிக்கை:
கடந்த காலத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லை என்றால், அவற்றை தனியாருக்கு விற்று விடுவது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொள்கை முடிவெடுத்து அதைச் சட்டமாக்கியது. இதனைத் தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இம்மியும் பிசகாமல் செய்து வருகிறது. இந்திய அளவில் லாபகரமாக இயங்கி வரும் அரசு மற்றும் பொத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.
பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைச் சரி செய்ய வேண்டிய அரசும், மின்துறையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணப் பாக்கி ஏறக்குறைய ரூ.1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அரசு மின்துறையை தனியாருக்குத் தாரை வார்க்க முடிவெடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி அரசு மின்துறையில் நிலவிவரும் பல்வேறு சீர்கேடுகளைக் கலைந்து, நல்ல நிர்வாகத்தையும், நுகர்வோருக்குச் சிறந்த சேவையையும் வழங்க வேண்டும். அதை விடுத்து தனியார் மயப்படுத்துதல் மூலம் மின்துறை வளர்ச்சி அடையும் என்பது ஏமாற்று வேலையாகும்.
எனவே, மின்துறையை தனியார்மயமாக்குவதைக் கைவிட்டு, மின்துறையை அரசு துறையாகவே நீட்டிக்க செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசைகளை வலியுறுத்துகிறோம்.
தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி வரும் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அரசு தனியார்மய முடிவைக் கைவிடவில்லை என்றால் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
Leave a Reply