புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது:
சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தல்!
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி ஆகியோர் இன்று (19.01.2022) விடுத்துள்ள கூட்டறிக்கை:
புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான “மேரி கட்டிடம்” எனப்படும் நகராட்சிக் கட்டிடம், பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் கடந்த 1887-ஆம் ஆண்டு “ஐரோப்பியன் கிரிட்டோ ரோமன்” எனும் கட்டிட கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தைக் கடந்தகால ஆட்சியாளர்களும், பொதுப்பணித்துறையும் உரிய வகையில் பராமரிக்காத காரணத்தால் 2016ஆம் ஆண்டு முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தேசிய தலைவர்கள், குபேர், அன்சாரி துரைசாமி, வ.சுப்பையா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடந்த வரலாறு இந்த நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு உண்டு.
புதுச்சேரி திட்ட செயலாக்க முகமை மூலம் சுமார் ரூ.16 கோடியில் மேரி கட்டிடம் கட்டுமானப் பணி கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கியது. 700 சதுர மீட்டரில் பழமை மாறாமல் கடந்த 2021 ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது.
முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெயரை அழைப்பிதழில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் போடவில்லை என்பதனால் மேரி கட்டிடம் திறப்பு விழா நின்றுபோனது. இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் போதிய இடவசதி இல்லாமல் கடந்த ஐந்தாண்டு காலமாக குபேர் திருமண நிலையம், கம்பன் கலையரங்கம், பிறப்பு இறப்பு சான்றிதழ் முதலியார்பேட்டை மேரியிலும் என மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய அரசு நகராட்சிக் கட்டிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.
அதைவிடுத்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் சிறிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக மேரி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது. இது எந்த நோக்கத்திற்காக புதிய நகராட்சிக் கட்டிடம் கட்டப்பட்டதோ அந்த நோக்கத்தையும் மக்களுக்கான பணிகளையும் முடக்கும் செயலாகும்.
எனவே, மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றுவதைக் கைவிட வேண்டும். மேரி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply