மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2022) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
வரும் ஜனவரி 12 அன்று புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழா நடத்த அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 7 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் ஆபத்தும் உள்ளது.
இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரிக்கு வந்து இவ்விழாவில் கலந்துகொள்வது கொரோனா தொற்றை மேலும் அதிகரிக்கும்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சமூக இடைவேளி இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டது கொரோனா தொற்றை அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி தேசிய இளைஞர் விழாவை புதுச்சேரி அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், பிரதமர் மோடி இவ்விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
Leave a Reply