மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2021) விடுத்துள்ள அறிக்கை:
கதிர்காமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.
கடந்த 09.12.2021 அன்று உடல்நிலைச் சரியில்லாததால் விடுப்பில் இருந்துவிட்டு பள்ளிக்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை அவரது அண்ணன் எதிரிலேயே தலைமை ஆசிரியர், ஆசிரியர் கடுமையாக திட்டி அவமதித்து உள்ளனர். மேலும், அம்மாணவியிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு பள்ளியைவிட்டு நின்றுவிடுமாறு கூறி மிரட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அம்மாணவி வீட்டிற்குச் சென்றவுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்துபோன மாணவியின் தாயார் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தன் மகள் சாவிற்குத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்தான் காரணம் என்று புகாரில் தெளிவாக கூறியுள்ளார். போலீசார் அப்புகாரை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்கொலைக்குத் தூண்டிய தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை.
இவ்வழக்கில் ரெட்டியார்பாளையம் போலீசார் தொடக்கம் முதலே சட்டப்படி செயல்படாமல் குற்றமிழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, மாணவியின் சாவுக்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலும், இவ்வழக்கை ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், காவலர் புகார் ஆணையம், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.
Leave a Reply