மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.11.2021) விடுத்துள்ள அறிக்கை:
ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக இருப்பவர் நெடுஞ்செழியன். இவர் டில்லியில் வடக்கு நகராட்சியின் உதவி ஆணையராக இருந்த போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர். இதனால், இவரை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுப் பணிக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். மேலும், நகராட்சி அதிகாரிகள் 6 இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்தார்.
பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு எவ்வித தகுதியும் இல்லாத இசைத் துறைப் பேராசிரியர் பி.வி.போஸ் முதல்வராக நியமிக்கப்பட்டதில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி அரசுக்குப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல்கலைக்கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசை, நடன துறைகளில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை. இத்துறைகளில் மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் பல்கலைக்கூடத்தின் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரத்தை ரத்து செய்ய முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், நுண்கலைத்துறை மாணவர்களின் படிப்பு செல்லாததாகி விடும் ஆபத்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரத்தை ரத்து செய்வதன் மூலம் போதிய மாணவர்கள் எண்ணிக்கை உள்ள நுண்கலைத்துறையை மூடவும் வாய்ப்புள்ளது. இதனால், ஏழை எளிய மாணவர்கள் ஓவியக் கலைஞராகும் கனவு சிதைக்கப்படும்.
கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் தகுதி இல்லாதவரை முதல்வராக நியமித்தது மட்டுமல்லாமல் அவரை நிரந்தர முதல்வராக்கவும் முயற்சித்து வருகிறார். இதற்கு அரசின் உயர் பொறுப்பிலுள்ள ஒரு சிலர் உதவுவதாகவும் தெரிகிறது.
கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் மீது பல்வேறு புகார்கள் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மத்திய அரசு இதில் தலையிட்டு ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத்துறைச் செயலரை காத்திருப்போர் படியலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், மத்திய ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனு அனுப்பி உள்ளோம்.
Leave a Reply