மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2021) விடுத்துள்ள அறிக்கை:
மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. குறிப்பாக குடிசை வீடுகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று பிழைக்கும் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
விவசாய நிலங்களில் விளைவித்த பயிர்கள் மழையில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். குறிப்பாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி வீணாகிப் போயுள்ளன. இதனால் விவசாய கூலி வேலை செய்பவர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடித் தொழிலை நம்பி வாழ்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு நாட்களுக்குப் புதுச்சேரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான மழைப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது. இதனால், மேலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க அனைத்து துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஈடுபடுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மழை, வெள்ளப் பாதிப்புக் குறித்து உடனடியாக முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதி பெற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் மழைக் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிதாத சூழல் ஏற்படும் என்பதால் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், அதற்குப் போதிய பணம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply