மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2021) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர் வார்டு ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளி வைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு நீக்கப்பட்டு இருந்தது. இந்திய அரசியல் சட்டம், புதுச்சேரி நடராட்சிகள் சட்டம் 1973 ஆகியவற்றுக்கு எதிரான இந்த அறிவிப்புக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேலும், இதனைத் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.
இதே கோரிக்கைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி இன்று ஒருநாள் முழு அடைப்ப்புப் போராட்டம் நடத்தி உள்ளனர். முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வெற்றிப் பெற செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் மூலம் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் வழங்கிடும் ஜனநாயக விழுமியங்களைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் தற்போதைய தேர்தல் ஆணையரின் செயல்பாடு உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ள தேர்தல் ஆணையரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். இல்லையேல் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply