மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.09.2021) விடுத்துள்ள அறிக்கை:
பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நியமன விதிகளைத் திருத்தி முதல்வரை நியமிக்க கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் முயற்சிப்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
பாரதியார் பல்கலைக்கூடம் மத்திய அரசின் சட்ட ரீதியான அமைப்பான (Statutory body) ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்லூரியாகும். இக்கல்லூரியில் நுண்கலைத்துறை, நிகழ்கலைத்துறை என இரண்டு துறைகள் உள்ளன. இதில் நுண்கலைத்துறை ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படியும், நிகழ்கலைத்துறை யூ.ஜி.சி. விதிகளின்படியும் இயங்கி வருகிறது.
பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படிதான் முதல்வரை நியமிக்க வேண்டும். இல்லையேல், ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் ரத்தாகி மாணவர்களின் படிப்பு செல்லாததாகிவிடும்.
தற்போதைய கலைப் பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமிக்க நியமன விதிகளைத் திருத்திக் கோப்பைத் தலைமைச் செயலரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். பல்கலைக்கூடத்தில் இசைத்துறை உதவிப் பேராசிரியர்களாக உள்ள போஸ், அன்னபூர்ணா இருவரில் ஒருவரை முதல்வராக்கும் முயற்சியில் இவ்வாறு செய்துள்ளார்.
உதவிப் பேராசிரியர் போஸ் உயர் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு எச்சரிக்கை மெமோ அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்னபூர்ணா 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகள் ஒரு மாணவர்கூட இல்லாமல் 41 லட்சத்து 41 ஆயிரத்து 876 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவரைக் கெளரவ விரிவுரையாளராக மாற்றி நியமிக்க பல்கலைக்கூடக் கணக்குத் தணிக்கை ஆய்வறிக்கையில் (Inspection Report on Accounts of BPK) கூறப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலின்படி பல்கலைக்கூடத்தில் கொரோனா காலத்தில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துள்ளனர். ஆனால், போஸ், அன்னபூர்ணா இருவரும் மட்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி முதல்வரை நியமிக்கவும், நிகழ்கலைத்துறையில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் துறைத்தலைவரே நிர்வகிக்கவும் பல்கலைக்கூட ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசும், கலைப் பண்பாட்டுத்துறையும் இம்முடிவைச் செயல்படுத்தாமல் காலந்தாழ்த்தி வருகின்றன. புதுச்சேரி அரசும், கலைப் பண்பாடுத்துறையும் இம்முடிவின்படி நுண்கலைத்துறைக்குத் தனி முதல்வரை உடனே நியமிக்க வேண்டும்.
எனவே, பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நியமன விதிகளைத் திருத்தி முதல்வரை நியமிக்க கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் முயற்சிப்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply