தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு:
“மக்களைக் கொன்று விட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா?”
– உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடும் கண்டனம்!
தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் போலீசார் ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தாதது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கேள்வி கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
“நாம் மக்களைக் கொன்றுவிட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்து விட்டால் நம் வேலை முடிந்துவிட்டதா? நாம் கட்டமைக்க விரும்பும் சமூதாயம் இதுதானா? மக்கள் சிலர் மீது பணத்தை விட்டெறிந்து விட்டு,
அனைத்தையும் மூடிமறைப்பதா?” என்று கடுமையாக தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி.
“Can we kill people and throw money at them and say our job is done? Is that the society that we want to built? Just throwing money at some people and everything is hushed up.”
மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு தன் பதிலுரை உறுதிமொழி பத்திரத்தில் (Counter affidavit) எல்லாவற்றையும் தெளிவாகக் கூற வேண்டும். இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் புலன்விசாரணைக் குழு மூலம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விசாரணை அறிக்கையை மூடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும். இது முக்கியமான வழக்கு என்பதால் வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களைக் கொன்ற போலீசார் மீது இதுவரையில் எவ்வித குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு (முந்தைய அரசும், தற்போதைய அரசும்) கொடிய கொலைக் குற்றமிழைத்த போலீசாரைக் காப்பாற்றும் நோக்கிலேயே செயல்பட்டனர், செயல்பட்டும் வருகின்றனர்.
உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இனிமேலாவது குற்றமிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோ.சுகுமாரன்
Leave a Reply