நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் ஊழல்கள் மற்றும் பழிவாங்கல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் (CMD) ஏ.ஆர்.அன்சாரி மற்றும் நிர்வாகத்தின் ஊழல்களைத் தட்டிக் கேட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தற்காலிகப் பணி நீக்கம், இடமாற்றம் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதோடு ஊழியர்களைக் கண்காணிக்க தனியார் உளவுத்துறை பயன்படுத்தப்படும் என பகிரங்க எச்சரிக்கையையும் செய்துள்ளதால் பெரும் அச்சம் நிலவுவது குறித்து மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் என்கிற வகையில் எங்களுக்கு நிறைய புகார்கள் வந்தன. உண்மை நிலவரத்தைக் கண்டு அறிக்கை அளிக்கும் நோக்குடன் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களையும் சேர்ந்த கீழ்கண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவில் பங்கு பெற்றோர்:-
1) மூத்த வழக்குரைஞர் பொ.இரத்தினம், மதுரை,
2) பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்,
3) பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை,
4) திரு.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
5) திரு.மு.சிவகுருநாதன், மனித உரிமைக்களுக்கான மக்கள் கழகம், திருவாரூர்.
இக்குழுவினர் நேற்று (டிசம்பர் 23, 2009) நெய்வேலி சென்று இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் உ.பரமசிவம் (துணைப் பொது மேலாளர்), சி.துரைக்கண்ணு (முதன்மை மேலாளர்), எ.கருணாகரன் (சிறப்பு நிலை முதுநிலை ஓட்டுனர்), எட்வர்ட் ராஜ் (இளநிலை மேலாளர்) ஆகியோரையும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து விவரங்களைத் தொகுத்துக்கொண்டனர். நிர்வாகத் தரப்பில் கருத்துக்களைக் கேட்பதற்காக நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர் ஊரில் இல்லை என்றும் முதன்மைப் பொது மேலாளர் லூர்ட்ஸ் அவர்களை சந்திக்குமாறும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவரை எமது குழுவினர் சந்தித்தபோது முன்கூட்டியே அனுமதி பெறாது வந்துள்ள நிலையில் பேச இயலாது என மறுத்துவிட்டார். எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் அறிந்த உண்மைகளாவன:-
நடந்த நிகழ்வுகள்:
நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் தொடர்ந்து பல ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஊழல்களுக்கு எதிராக பலர் போராடி வந்துள்ளனர். இதன் விளைவாக நிறுவனத் தலைவர்கள் உட்படப் பல நிர்வாகிகள் சிறைவாசம், வேலை நீக்கம் உட்படப் பல தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக முன்னாள் தலைவர் எம்.பி.நாராயணன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு முன்னாள் தலைவர் பூபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். பொது மேலாளராக இருந்த ஓ.எஸ்.தியாகராஜன் ஊழல் நடவடிக்கைளுக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் இயக்குனராக இருந்த நரசிம்மன் ஊழல் குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் முன் கூட்டியே பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்ற நவம்பர் 12-ம் தேதி ‘தமிழக அரசியல்’ என்கிற தமிழ்ப் புலனாய்வு இதழில் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஏ.ஆர்.அன்சாரியின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்த செய்தி வெளியானது. நெய்வேலி அமைப்பின் கிளை நிறுவனமாக ராஜஸ்தானில் தற்போது உருவாகியுள்ள சுரங்கத்தின் தலைமை அதிகாரியாக ஏ.ஆர்.அன்சாரியால் நியமிக்கப்பட்ட பிரான்சிஸ் சேவியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட விசாரணையில் பல ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதை ஒட்டி அவர் பதவி விலகல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். நெய்வேலி நிறுவனத் தலைவர் அன்சாரிக்கும் இதில் தொர்புள்ளது எனவும் அவருக்கு மிகவும் நெருக்கமான மெர்லின் பாரத் என்கிற நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய்கள் கைமாறியுள்ளன எனவும் அப்பத்திரிக்கை எழுதியது. லஞ்ச ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகளும் இதை உறுதி செய்துள்ளதாகவும் அந்த இதழ் எழுதியிருந்தது. இதையொட்டி அன்சாரியும் நெய்வேலி நிர்வாகமும் பழிவாங்கள் நடவடிக்கைகளில் இறங்கியது. அவற்றில் சில:-
அ. நிறுவனம் சார்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அதை பல ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நெய்வேலி நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டன (எண். CORP/P&A/720/2009, தேதி 15-11-2009). நிறுவனத்திற்கு எதிராக வதந்திகளைப் பரப்புவோர் மீது என்.எல்.சி. நிலை ஆணைகள் எண்.46 (28) மற்றும் நடத்தை விதிகள் 26 (11) ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு அச்சுற்றறிக்கை நிற்கவில்லை. சுரங்கம், தெர்மல் மற்றும் அலுவலகம் ஆகிய பணி இடங்களிலும் மெயின் பஜார், மத்தியப் பேருந்து நிலையம், எட்டு ரோடு, தெர்மல் பேருந்து நிலையம், புதுக்குப்பம் சதுக்கம், பெரியார் சதுக்கம் ங்ற்ஸ்ரீ., ஆகிய பொது இடங்களிலும் துறைசார்ந்த மற்றும் தனியார் புலனாய்வு நிறுவனங்களைச் சார்ந்த உளவாளிகள் நியமிக்கப்பட்டு ஊழியர்கள் கண்காணிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டது.
ஆ. ‘தமிழக அரசியல்’ இதழில் வெளிவந்த செய்தியை நகல் எடுத்து ஒட்டி, வினியோகித்தார்கள் எனக் கீழ்க்கண்டோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
1. திரு. பேச்சிமுத்து, தொழில்நுட்ப உதவியாளர்,
2. திரு. கருணாகரன், சிறப்பு நிலை முதுநிலை ஓட்டுனர்,
3. திரு. எட்வர்ட் ராஜ், JPO,
4. திரு. சிவலிங்கம், கேன்டீன் உதவியாளர்,
5. திரு. முருகேசன்
6. திரு. அனில்குமார், ACM
7. திரு. சிவக்குமார், தொழில்நுட்ப உதவியாளர்.
இ. விருப்ப இடமாற்றம் கோரியவர்கள் தவிர கீழ்கண்ட இரு உயரதிகாரிகள் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
1. திரு. உ.பரமசிவம், துணைப் பொது மேலாளர், Material Management Complex – லிருந்து அனல் மின் நிலையம் 1க்கு மாற்றப்பட்டார்.
2. திரு.சி.துரைகண்ணு, முதன்மை மேலாளர், நெய்வேலியிலிருந்து தற்போது தூத்துக்குடியில் தமிழக அரசுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள என்.டி.பி.எல். நிறுவனத்திற்கு இடமாற்றப்பட்டார்.
தொடர்ந்து நிகழ்ந்தவை:
1. இந்த நடவடிக்கைளின் விளைவாக நெய்வேலி நகர் முழுவதும் கடும் அச்சத்தால் உறைந்துள்ளதை நாங்கள் கண்டோம். உளவுத்துறையால் கண்காணிக்கப்படும் அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. இடமாற்றம், தற்காலிகப் பதவி நீக்கம், விசாரணை ஆகியன குறித்தும் அச்சம் உள்ளது. சுமார் 31 ஆண்டுகள் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் பணிபுரிந்த மூத்த அதிகாரியும், எல்லோராலும் நேர்மையான, திறமையான அதிகாரி என மதிக்கப்படுவோருமான பரமசிவம் அவர்களின் தாயார் கடும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த அம்மையார் இறந்து போனார். திரு.பரமசிவம் தனது பணியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதை எங்களிடம் கூறினார்.
2. முதன்மை மேலாளர் சி.துரைக்கண்ணு அரை மணி நேரத்திற்குள் பதவி விடுப்பு கடிதம் பெற்றுச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். எனினும் அவர் அதை ஏற்க மறுத்ததோடு உடல்நிலை காரணமாக டிசம்பர் 31 வரை மருத்துவ விடுப்பு தேவை என டிசம்பர் 8 அன்று விண்ணப்பித்தார். அவரது விடுப்பு விண்ணப்பத்தை ஏற்க மறுத்த நிர்வாகம் டிசம்பர் 10 அன்று அவரைக் கட்டாயமாக பணியிலிருந்து விடுவித்தது. எனினும் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி ஜனவரி 18 வரை இந்த ஆணைக்கு இடைக்காலத் தடை பெற்று நேற்று (டிசம்பர் 23) மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
3. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களில் கருணாகரன், எட்வர்ட் ராஜ் ஆகிய இருவர் மட்டும் தொடர்ந்து பணி நீக்கத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். பிற ஐவரது பணிநீக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எட்வர்ட் ராஜ் மீது இது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது பார்வைகள்:
1. அன்சாரி ஊழல் புரிந்துள்ளது குறித்த ஊழல் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் டாக்டர் ஜெயா பாலச் சந்திரன் அளித்துள்ள அறிக்கை நகல் (Office Memorandum No. 007/COL/046, 11, September 2007) இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. அனல் மின் நிலைய சாம்பல் வெளியேற்றம் தொடர்பான டெண்டரில் அன்சாரி விதி முறைகளை மீறி ஊழல் புரிந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு எச்சரிக்கை மெமோ கொடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. இது போன்ற எச்சரிக்கை மெமோ கொடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது வழக்கம். எடுத்துக்காட்டாக நிர்வாக இயக்குனர் வி.ரவிக்குமாருக்கு இவ்வாறு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. ஆனால் எச்சரிக்கை மெமோ அளிக்க பரிந்துரைக்கப்பட்ட அன்சாரி இன்று மிக உயர்ந்த பதவியில் உள்ளார். பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்தப் பதவியை அவர் பெற்றுள்ளார் என்கிற கருத்து நெய்வேலி நகரில் பொதுவாக நிலவுகிறது.
2. பழிவாங்கப்பட்டுள்ள அனைவரும் நெய்வேலி நிர்வாக ஊழல்களை தொடர்ந்து வெளிக் கொணர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையான, திறமையான அதிகாரி என நாங்கள் சந்தித்த ஒவ்வொருவராலும் பாராட்டப்பட்ட திரு. பரமசிவம் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் செயல்பட்டவர். நிர்வாக ஊழல்கள் குறித்து அவர் சென்ற 11-05-2009 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய விரிவான கடிதம் பிரதமர் அலுவலகத்திலிருந்து அன்சாரிக்குப் பதில் கோரி அனுப்பப்பட்டுள்ளது. துணை மேலாளரிலிருந்து மேலாளர் பதவி உயர்வு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளதோடு அவருக்குப் கீழாக 65வது இடத்திலிருந்தவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்தவருமான தன்ராஜ் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இன்று அவர் பொது மேலாளராக உள்ளார்.
தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மை மேலாளர் துரைக்கண்ணு நிர்வாக இயக்குநர் நரசிம்மனின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர்ந்தவர். இதுதொடர்பான அவரது பேட்டி இந்தியா டுடே (நவம்பர் 30, 2005) இதழில் வெளிவந்தது. இறுதியாக அவ்வதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பள்ளிக் கழகச் செயலாளராகத் திறம்படப் பணியாற்றியவர் துரைக்கண்ணு. மக்கள் கல்வி இயக்கம், அம்பேத்கார் கழக மையம், நெய்வேலி தமிழ்ச் சங்கம் முதலான பல்வேறு சமூக அமைப்புகளில் பணிபுரியும் பொறுப்புமிக்க இந்த அதிகாரிக்கும் ‘தமிழக அரசியல்’ இதழில் வந்த செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த இதழுக்கு யார் செய்தி கொடுத்தார்கள் என்பது அந்த இதழிலேயே புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இன்று வரை அது ரத்து செய்யப்படாமல் உள்ள கருணாகரன் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இவரும் தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக பிரதமருக்குப் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவர் பணியாற்றும் இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை அவ்வப்போது தட்டிக் கேட்டு வந்துள்ளதும் நிர்வாகத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவுடன் இது நியாயமா என வினவி பத்திரிகைப் செய்தியைத் துண்டறிக்கையாக வெளியிட்டதோடு, மொழிபெயர்த்து பிரதமருக்கும் அனுப்பியுள்ளார். பிறர் மேலான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னும் இன்னும் அவர் மீது பணி நீக்கம் தொடர்வதன் பின்னணி இதுவே.
பணி நீக்கம் ரத்து செய்யப்படாத இன்னொருவர் திரு.எட்வர்ட் ராஜ். ஏ.ஐ.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளரான இவர் தொடர்ந்து நெய்வேலி ஊழியர்களுக்கான ஊதியச் சீர்திருத்தம் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி வந்துள்ளார். குறிப்பாக சென்ற நவம்பர் 18ல் ஊதியச் சீர்திருத்தம் தொடர்பாக அகில இந்திய அளவில் எச்.மஹாதேவன் உள்ளிட்ட நிபுணர்களை அழைத்து சிறப்புக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இது தொடர்பாக பொய் சாட்சிகளை வைத்து அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது. அனுமதி பெற்று 18ந் தேதி நடந்த ஒரு கூட்டம் தொடர்பான ஒரு துண்டறிக்கையை 25ம் தேதி வினியோகித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கூட்டம் தொடர்பான அழைப்பு ஒன்றை ஏன் அவர் ஒருவாரம் கழித்து வினியோகிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதிலில்லை.
இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ள போதே தற்போதைய பணி நீக்கம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3. இந்தப் பணி நீக்கங்களில் சில, விதி முறைகளுக்கு புறம்பானவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக எட்வர்ட் ராஜீன் பணிக்கம். இவர் ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பின் பொதுச் செயலர். நிர்வாகத்துடன் ஒருவர் சில பிரச்சனைகள் தொடர்பாக விசாரணையில் உள்ளபோது தொழிற் தகராறு சட்டம் 1947, அத்தியாயம் 7 – 33, 2 (4), விதிப்படி விசாரணை அமைப்பின் அனுமதி பெறாது அவர் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. எட்வர்ட் ராஜ் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இவ் விதிக்குப் புறம்பானது.
துரைக்கண்ணு நெய்வேலி நிறுவனத்தின் ஒரு மூத்த பொறியாளர். நெய்வேலி நிறுவப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஒருவரை தமிழக அரசுடன் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு நிறுவனத்திற்கு அவரது ஒப்புதலுடன்தான் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமே தவிர இப்படி ஒப்புதலின்றிச் செய்ய இயலாது. தவிரவும் முதல் தலை முறையாக உயர் பதவிகளுக்கு வருகிற தலித் அதிகாரிகளை இவ்வாறு தொலைவாக இடமாற்றம் செய்யக்கூடாது என்கிற அரசு வழிகாட்டலுக்கும் (G.I. Dept. of Per & Trg., OM No. 36026/3/85-Estt. (SCT) dated 24-06-1985 and OM No. 36011/25/89 Estt. SCT dated 21-08-1989) இது எதிரானது.
சுரங்கத் தொழில் நுட்பத்தில் திறமை மிக்க ஒரு மூத்த அதிகாரியான பரமசிவத்தை, வயது முதிர்ந்த நிலையில் அவர் உள்ள போதும் ‘ஷிப்டில்’ மாறி மாறி வேலை செய்யப்கூடிய ஒரு பணிக்கு மாற்றியுள்ளதும் விதி முறைகளுக்குப் புறம்பானது எனச் சொல்ல இயலாவிட்டாலும் பொது நெறிமுறைகளுக்குப் புறம்பானது. ஆனால் எந்த விதி முறைகளுக்கும் கவலைப்படாமல் ஒரு குட்டி சுல்தான் போல ஆணைகளை இடுவதில் வல்லவர் அன்சாரி. அவர் அவ்வப்போது வெளியிடும் இத்தகைய ஆணைகள் பற்றிப் பலரும் முறையிட்டதால் தனக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளை மொத்தமாக வாங்கி எரிப்பது, நிறுவன ஊழியர்களைப் பயன்படுத்தி தனக்கு எதிரான சுவரொட்டிகளைக் கிழிப்பது முதலியவற்றையும் அவர் செய்து வந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக தனியார் உளவுத்துறையைப் பயன்படுத்தி ஊழியர்களைக் கண்காணிக்கப் போவதாக மிரட்டி ஒரு ஆணையை வெளியிட்டுள்ளதோடு அதைத் துண்டறிக்கையாக அச்சிட்டு ஊழியர்கள் மத்தியில் வினியோகத்திருப்பது இது வரை வேறெங்கும் நடந்திராத ஒன்று.
கோரிக்கைகள்:
1. ஊழல் அதிகாரியான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரியை தற்காலிகப் பணி நீக்கம் செய்து ஊழல், நிர்வாக முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.
2. தன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத அன்சாரி, ஊழியர்கள் வதந்திகளைப் பரப்பினார்கள் என நடவடிக்கை எடுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை வாபஸ் பெறப்படவேண்டும். அவர்களுக்கு இந்தத் தற்காலிகப் பணி நீக்க காலத்திற்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும்.
3. இடமாற்றம் செய்யப்படட அதிகாரியான துரைக்கண்ணு, பரமசிவம் ஆகியோரது இடமாற்ற ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும். பரமசிவம் அவர்களுக்கு இயல்பாக வரவேண்டிய பதவி உயர்வு உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
4. ஊழியர்கள் மத்தியில் அச்ச மூட்டும் வகையில் வினியோகிக்கப்பட்டுள்ள அறிக்கையை நிர்வாகம் ரத்து செய்யவேண்டும். ஊழியர்களைக் கண்காணிக்க தனியார் உளவுத் துறையை பணியமர்த்தப் போவதாக உள்ள அந்த ஆணையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. நிறுவனத்தின் தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குனர் (MD) பதவிகள் ஒருவரிடமே குவிக்கப்படுவது ஊழல்களுக்கு வழிவகுக்கிறது. இப்பதவிகள் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும்.
(24.12.2009 காலை 12 மணிக்கு கடலூர் செய்தியாளர் மன்றத்தில் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது)
Leave a Reply