மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2021) விடுத்துள்ள அறிக்கை:
கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்காத பாரதியார் பல்கலைக்கூட உதவிப் பேராசிரியர்கள் மீது துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறை மற்றும் நிகழ்கலைத்துறையில் பயிலும் மாணவர்களுக்குக் கொரோனா தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டுமென கலைப் பண்பாட்டுத்துறை அறிவுறுத்தி இருந்தது. இதன்படி, இத்துறைகளின் உதவிப் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்தனர்.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்களின்படி இசைத்துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் பி.வி.போஸ், எல்.அன்னபூர்ணா ஆகியோர் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கவில்லை.
ஆன்லைன் வகுப்புகள் எடுக்காத மேற்சொன்ன உதவிப் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 16.11.2020, 08.04.2021 ஆகிய நாட்களில் கலைப் பண்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் இம்மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேற்சொன்ன பி.வி.போஸ் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு இரண்டு எச்சரிக்கை மெமோக்களும் (Warning Memo) அளிக்கப்பட்டுள்ளது. தகுதி இல்லாத போதும் முதல்வர் பதிவிக்காக தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் போட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவலின்படி இவ்வழக்குகளை எதிர்கொள்ள அரசுத் தரப்பில் 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அரசு நிதி நெருக்கடியில் உள்ள போது தேவையில்லாமல் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகார்கள் அளிக்கப்பட்டும் கலைப் பண்பாட்டுத்துறை அதிகாரிகள் மேற்சொன்ன பணியில் ஒழுங்கீனமாக இருக்கும் உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கலைப் பண்பாட்டுத்துறையின் அலட்சியப் போக்குப் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும்.
எனவே, துணைநிலை ஆளுநர் இதில் தலையிட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்காமல் மாணவர்களின் கல்வியைச் சீரழித்த மேற்சொன்ன இரண்டு உதவிப் பேராசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேன்டுமென வலியுறுத்துகிறோம்
Leave a Reply