மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 16.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :-
பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால் அகதி மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற சட்டம் கொண்டுவரப் போவதாக வாஜ்பாய் கூறியிருப்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நமது நாடுகளில் உயிர்வாழ வழியில்லாதபடி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படும் மக்கள்தான் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். “துன்புறுத்தலுக்கு எதிராக பக்கத்து நாடுகளில் புகலிடம் தேடவும் அங்கே சென்று வாழவும் யாரொருவருக்கும் உரிமை உண்டு” என சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் 14-ம் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 1951 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளும் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளும் இங்கே தரப்படுவதில்லை. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைகளைவிடக் கொடுமையான சூழலில்தான் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். அகதிமக்கள் சர்வதேச நாடுகளிடம் உதவிபெறுவதற்கும் இந்திய அரசு அனுமதிப்பதில்லை. பங்களாதேஷிலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறியுள்ள சக்மா அகதிகளுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என சமதா கட்சித் தலைவர் திரு. ஜார்ஜ் பெர்னான்டஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்க, அகதிகளை வெளியேற்ற சட்டம் கொண்டு வருவேன் என வாஜ்பாய் கூறியிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். பொது சிவில் சட்டம், அயோத்தி பிரச்சனை, காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீக்குவேன் என பி.ஜே.பி. தொடர்ந்து கூறிவருவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானாகும்.
இப்போது அகதிகளுக்கு எதிராகவும். பி.ஜே.பி. பேசி வருகிறது. சர்வதேச மனித உரிமை ஆண்டான இந்த ஆண்டில், மனித உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் பி.ஜே.பியின் மக்கள் விரோத போக்கினை எதிர்க்க முன்வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply