உண்மை அறியும் குழு அறிக்கை:
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. ஜனவரி 12, 2006 தொடங்கி ஜுலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 தேதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52,332 பேர் வாழ்கின்றனர் (பார்க்க : வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களின் நிலைமை எப்படி உள்ளது, போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அறிய தமிழகத்திலுள்ள முக்கிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த முன்னோடி மனித உரிமை ஆர்வலர்கள் 19 பேர் அடங்கிய குழு ஒன்று அரசு அனுமதி பெற்று சென்ற ஜுலை 8ந் தேதி அன்று இராமேஸ்வரம் மண்டபம் முகாமைப் பார்வையிட்டது. தொடர்ந்து இக்குழுவினர் பிரிந்து சென்று தமிழகமெங்குமுள்ள கீழ்க்கண்ட முகாம்களையும் பார்வையிட்டனர்.
கீழ்ப்புத்துப்பட்டு, பெரியசெவலை (விழும்புரம் மாவட்டம்) திருவாதவூர் (மதுரை மாவட்டம்) குள்ளஞ்சாவடி, விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திகாட்டானூர் (சேலம் மாவட்டம்) பரமத்தி வேலூர், கரூர் (நாமக்கல் மாவட்டம்) பவானி சாகர் அணைக்கட்டு (ஈரோடு மாவட்டம்)
குழு உறுப்பினர்கள்:
- பொ.இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்.
- கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
- அ.மார்க்ஸ், பேராசிரியர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR).
- ச.பாலமுருகன்,வழக்கறிஞர், பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.
- சே.கோச்சடை, பேராசிரியர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.
- கண.குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம், ஈரோடு.
- தமயந்தி, வழக்கறிஞர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).
- கேசவன், வழக்கறிஞர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).
- பகத்சிங், வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம், மதுரை.
- இராபர்ட், வழக்கறிஞர், மதுரை.
- மேகவண்ணன், எழுத்தாளார், மனித உரிமைக்கான மக்கள் கழகம்(PUHR).
- மு.முத்துக்கண்ணு, இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை (INSAF), புதுச்சேரி.
- ம.இளங்கோ, பெரியார் திராவிடர் கழகம்,புதுச்சேரி.
- வீரமோகன், பெரியார் திராவிடர் கழகம்,புதுச்சேரி.
- இரா.முருகப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, திண்டிவனம்.
- பாவேந்தன், வழக்கறிஞர், தமிழ்த் தேச வழக்கறிஞர்கள் நடுவம்.
- எஸ்.சங்கரலிங்கம், பேராசிரியர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், மதுரை.
- எஸ்.சண்முகநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.
- அ.சுப்பிரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.
முகாம்களின் நிலைமை:
இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கும் அகதிகள் அனைவரும் மண்டபம் முகாமுக்குக் கொண்ட வரப்படுகின்றனர். இது ஒரு இடைக்கால முகாம் எனச் சொல்லப்படுகிறது. எனினும் நாங்கள் சென்றபோது சென்ற ஜனவரிக்குப் பின் புதிதாக வந்திருந்த 4343 பேர்கள் தவிர பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கு 220 குடும்பங்களைச் சேர்ந்த 756 பேர்கள் வசிப்பதையும் கண்டோம். ஜுலை 8ந் தேதி அன்று 28 பேர் வந்திறங்கியுள்ளனர். அரிச்சல் முனை என்னுமிடத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள் இலங்கைப் பணம் ரூ.1000/- கொடுத்து 9 கி.மீ. தொலைவிலிருந்த முகந்தராயசத்திரத்திற்கு வந்திருந்தனர். உளவுத்துறை அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தது. அரிச்சல்முனை தவிர பாம்பனிலும் அகதிகள் வந்திறங்குகின்றனர். தலைமன்னார், பேசாலை, கிளிநொச்சி எனப் பல பகுதி களிலிருந்தும் இங்கு வருகின்றனர். அன்று வந்திறங்கி யிருந்தவர்களில் பெரும்பாலோர் மீன் பிடித்தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள். அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவரின் குடும்பமும், டிரைவர் ஒருவரின் குடும்பமும் கூட அதிலிருந்தது. போர்ச் சூழலால் மீன் பிடித்தொழில் முழுவதுமாய் நின்று போயுள்ளது. இலங்கை ராணுவத்தால் இளைஞர்கள், பெண்களின் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்துள்ளது. வந்திருந்தவர்கள் 3 நாட்கள் மன்னார் காட்டில் காத்திருந்து ஒவ்வொருவரும் சுமார் 7000 முதல் 10,000 இலங்கை ரூபாய்கள் வரை படகுக் காரர்களுக்குத் தந்து வந்திருந்தனர். மேலும் 10,000 பேர் இங்கு வருவதற்காக மன்னார் காடுகளில் காத்திருப்ப தாகவும் கூறினர். படகில் வரும்போது இலங்கைக் கடற்படையோ, விடுதலைப் புலிகளோ பார்த்தால் பிடித்துச் சென்றுவிடும் ஆபத்து அவர்களுக்கு உள்ளது.
இந்தியாவில் தரை இறங்கியவுடன் முதலில் இந்தியக் கடற்படைச் சோதனை, பின் முகந்தராய சத்திரத்தில் க்யூ பிரிவு மற்றும் °பெஷல் பிராஞ்ச் போலீசார் விசாரணை. பின்னர் தனுஷ்கோடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு மீண்டும் விசாரணையும் பதிவும் செய்யப்படுகிறது. பின்பு மாலையில் மண்டபம் முகாமிற்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். தொண்டு நிறுவனத்தினர் அளிக்கும் உணவு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மண்டபம் முகாமில் புதிதாய் வந்தவர்கள் போலீஸ்பாதுகாப்பில் குவாரன்டைனில் வைக்கப்படுகின்றனர். இது ஒரு சிறைக் கொட்டடி. நாங்கள் சென்றபோது ஆண்களுக்கான குவாரன்டைனில் (சுமார் 20க்கு 20அடி) 39 பேர் அடைக்கப் பட்டிருந்தனர். இரண்டே இரண்டு கழிப்பறைகள் மட்டுமே அதில் இருந்தன. இவர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) ஜுன் 17 முதலும், மன்னாரைச் சேர்ந்த முருகையன் (42) ஜுன் 27 முதலும் அங்கு அடைக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவு வெளியிலிருந்து தருவித்துத் தரப்படுகிறது. ஒருவருக்கு ஒருநாள் உணவுச் செலவு ரூ.35/- விசாரணையின்போது இயக்கங்களுடன் தொடர்புடைய தாகச் சந்தேகத்திற் குள்ளாகிறவர்கள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 30 நாட்கள் வரை இத்தகைய குவாரன்டைனில் வைக்கவேண்டுமென்பது இந்திய அரசின் ஆணை என்றார் முகாம் அதிகாரி.
மண்டபத்திலும் சரி பிற முகாம்களிலும் சரி பிரச்சினைகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. எங்குமே அகதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வீடுகள் வசிக்கத் தகுதியான வையாக இல்லை. எல்லாம் 80களின் இறுதியில் கட்டப்பட்டவை. அதற்குப்பின் அவை புதுப்பிக்கப்படாம லேயே உள்ளன. பெரும்பாலும் ஓடு மற்றும் தார் அட்டைகளால் வேயப்பட்ட 10க்கு 10அடி அளவுடைய வீடுகளே இவை. பவளத்தானூர், குறுக்கப்பட்டி (சேலம் மாவட்டம்) முகாம்களில் இரண்டு வகை வீடுகளும் உண்டு. இவை `ஓட்டுக் காம்ப்’, `அட்டைக் காம்ப்’ என அழைக்கப் படுகின்றன. அட்டை வீடுகளில் பகல் வேலைகளில் யாரும் இருக்க முடியாது. ஓட்டு வீடுகள் உடைந்து மழைக் காலங்களில் ஒழுகுகின்றன.
அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகளும் கூட எல்லோருக்கும் தரப்படவில்லை. எடுத்துக்காட்டாக பவளத்தானூர் முகாமில் 123 குடும்பங்கள் (482 பேர்) உள்ளன. அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் 60 மட்டுமே. பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழ்வோர் திருமணமாகித் தனிக்குடித்தனம் அமைக்கும்போது அவர்களே சொந்தப் பொறுப்பில் வீட்டைக் கட்டிக் கொள்ளும் நிலையே எங்கும் உள்ளது. அதற்கும்கூட சில முகாம்களில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்திகாட்டானூர் முகாமில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
எந்த முகாமிலும் கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை. மிகச் சில கழிப்பறைகள். அவற்றிலும் தண்ணீர் வசதி இல்லை. ஆண்களும், பெண்களும் அருகிலுள்ள காடுகளுக்குச் சென்றே உடற்கடன்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை. இலங்கைப் பண்பாட்டில் இத்தகைய நிலை இல்லை என்பதால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இதற்கெனப் பெண்கள் வெளியே செல்லும்போது சில இடங்களில் `ஈவ் டீசிங்’ பிரச்சினை. அடுத்துள்ள கொல்லைக் காரர்கள் கல்லால் அடிக்கும் நிலையும் உள்ளது. மண்டபம் முகாமில், காட்டுப் பகுதியில் பாம்புத் தொல்லைகளும் உள்ளன. இங்கு செல்வநாயகி (64) என்கிற வயதான பெண்மணி மலம் கழிக்க வெளியே செல்ல இயலாததால் சாப்பிடாமலேயே உள்ளார். குளிப்பதற்கு அறைகள் கிடையாது. பெண்கள் உட்பட பொதுக் கிணறு களிலேயே குளிக்க வேண்டியுள்ளது. எந்த முகாமிலும் போதுமான குடிநீர் வசதி இல்லை. விருத்தாசலம் முகாமில் ஒரே ஒரு குழாய் மட்டுமே உள்ளது. அதிலும் தொட்டி இல்லை. காலை. மாலை குறைந்த நேரம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. சில கல் தொலைவிற்குச் சென்று சைக்கிளில் தண்ணீர் கொண்டுவந்தே தம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.
இராமேஸ்வரம் முகாமில் கிணறுகள் இருந்த போதிலும் தூர் வாராமல் கிடக்கின்றன. எல்லா முகாமிகளிலும் ஒற்றை பல்பு முறையில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. சில முகாமிகளில் மட்டும் தனி மீட்டர் வைக்க அனுமதி உள்ளது. ஒற்றை பல்புக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் அளிக்கப்படுகிறது. சார்ப்பு இறக்கி இவர்கள் தாங்களாகவே அமைத்துள்ள சமையல் அறை, திண்ணை ஆகியவற்றிற்கு மின்சார வசதி கிடையாது. குள்ளஞ்சாவடி முகாமில் ஒரு பகுதிக்கு மின்சாரமே இல்லை. கொக்கிப் போட்டு சட்டபூர்வமற்ற முறையில் மின்சாரம் எடுக்க வேண்டிய நிலை இங்குள்ளது. பவானிசாகர் முகாமில் 16 ஆண்டுகளாக மின்சார வசதி செய்யப்படாத வீடுகள் உள்ளன. பின்னர் கட்டப்பட்ட 30 வீடுகளுக்கு ஒரு பல்பு வசதி செய்து கொடுக்கப்பட்டாலும், எல்லா விளக்குகளும் ஒரே சர்வீசில் இருந்து எடுக்கப்படுவதால் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க கட்டண விகிதம் அதிகரிக்கும் நிலை உள்ளது.
முகாம்களில் இருப்போருக்கு உடனடியாகப் பதிவு செய்து அட்டைகள் வழங்கப்பட்டபோதும் பல முகாம்களில் பதிவு இல்லாமல் பலர் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 100 குடும்பங் களைச் சேர்ந்த 949 பேர் இன்னும் அகதிப் பதிவில்லாமல் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகையும் கிடைப்பதில்லை. முகாமுக்கு வெளியே உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அகதிப் பதிவுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டு : பவானிசாகர் முகாம்.
எங்கும் குப்பை வண்டி வருவதில்லை. தூய்மைப் பணி நடைபெறுவதில்லை. முகாமிலுள்ளவர்களே அதைச் செய்ய வேண்டிய நிலை.
பல முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. சிலவற்றில் தொண்டு நிறுவனங்கள் பயிற்சியாளர்களைக் கொண்டு மருந்துகள் கொடுக்கின்றனர். மண்டபம் முகாமில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை இருந்தபோதிலும் கடந்த 15 ஆண்டுகளாகப் படுக்கைகள் அதிகரிக்கப்பட வில்லை. சுற்று வட்டார மக்களும் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
முகாம்களுக்குள் செயல்படும் குழந்தை காப்பகங்கள் தொண்டு நிறுவனங்களாலேயே நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்குக் கடலை முதலிய சத்துணவு வழங்குவது சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்குத் தடை இல்லாத போதும் கட்டணச் சலுகை இல்லை. தொண்டு நிறுவனங்கள் சில ஓரளவு உதவி செய்கின்றன. முழுமையான உதவி இல்லை. உயர்கல்வியில் இருந்து வந்த 2 சத இடஒதுக்கீடு முந்தைய ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் உள்ள சகுந்தலாதேவி என்பவரின் மகள் உஷா நந்தினிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வில் 807 மதிப்பெண்கள் பெற்றும் பி.எஸ்.சி., தாதிமார் பட்டைய படிப்பிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை 16 வருட காலம் சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டு 2005 இல் நீதிமன்றத் தலையீட்டில் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.
அகதியாகப் பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசு வழங்கும் உதவிப் பணம் போதுமானதாக இல்லை. குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ.200ம், 12 வயதுக்கு மேற்பட்ட மற்றவர்களுக்கு ரூ.144ம், 12 வயதுக்குட்பட்ட முதல் குழந்தைக்கு ரூ.90ம், அடுத்த குழந்தைக்கு ரூ.45ம் கொடுக்கப்படுகிறது. வயது வந்தவர்களுக்கு 12 கிலோவும் குழந்தைகளுக்கு 6 கிலோவும் அரிசி மாதந்தோறும் கிலோ 0.57 பைசா என்கிற மான்ய விலையில் தரப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையிலிருந்தே இவற்றையும் பிற தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இது சாத்தியமில்லை என்பதால் ஆண்களும், பெண்களும் கட்டிட வேலை, சித்தாள், தச்சுத் தொழில், கொத்தனார் வேலை, பெயிண்டிங் என சாத்தியமான எல்லா வேலைகளையும் செய்கின்றனர். அகதிகள் என்பதால் இவர்கள் பணிக்குச் செல்லுமிடங்களில் பணிப் பாதுகாப்பு இல்லை. மண்டபம் முகாமில் இருக்கும் யாழ்ப்பாணம் கமலேந்திரவதி (43)யின் கணவர் கண்ணதாசன் (44) இவ்வாறு கட்டிட வேலைக்குச் சென்றபோது ஜுன் 6ந்தேதி அன்று மின்சாரம் பாய்ந்து இறந்து போயுள்ளார். எந்த இழப்புத் தொகையும் வழங்கப்படவில்லை. முகாம் அதிகாரிகளுக்கும் விவரம் தெரியவில்லை. பரமத்திவேலூர் முகாமில் ஆனந்தகுமார் (36), கதிர்காமத்தம்பி (36) ஆகியோர் மீது வேலைக்குச் சென்ற இடத்தில் மரம் விழுந்து முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடுக்கப்படும் ரேஷன் அரிசி சில இடங்களில் தரம் குறைவாகவும், எடை குறைவுடனும் இருப்பதாகவும் புகார்கள் சொல்லப்பட்டன.
மண்டபம் முகாமிலுள்ள பலரின் நெருங்கிய உறவினர்கள் தமிழகத்திலுள்ள வேறு பல முகாம்களில் உள்ளனர். எனவே இங்குள்ள பலர் முகாம் மாற்றம் கோரியுள்ளனர். நாங்கள் சென்ற அன்று 1600 பேர்களுக்கு மாற்றல் ஆணை பிறப்பித்துள்ளதாக முகாம் அதிகாரி கூறினார்.
கரூர் முகாமில் 1990இல் இருந்து சுமார் 40 குடும்பங்கள் ஒரு அரிசி குடோனில் குடியமர்த்தப்பட்டுள் ளனர். சாக்கு, படுதா, சேலை முதலியவற்றைப் பயன்படுத்தி மறைப்புக் கட்டி இக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
முகாமுக்குள் எங்கும் தெரு விளக்கு, சாலை வசதிகள் இல்லை.
படிப்பகங்கள் என்கிற பெயரில் வெறும் கீற்றுக் கொட்டகைகள் சில முகாம்களில் உள்ளன. குழந்தை காப்பகங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான எந்த விளையாட்டுப் பொருட்களும் இல்லை.
ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் குறைந்தபட்ச உடைகள் (கைலி, பனியன், சேலை) இரண்டாண்டுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் பாத்திரங்கள் முதலியன போதுமானவையாக இல்லை.
மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியற்ற சூழலில் பல்வேறு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர்.
முகாம்களிலுள்ள பெண்கள், சுயஉதவிக் குழுக்களை அமைத்துச் செயற்படுகின்றனர். ஆனால் அவற்றிற்கு அரசு அங்கீகாரம் இல்லை. சுயஉதவிக் குழுக்களின் பெயரில் வங்கிகளில் கணக்குத் தொடங்கவும் மறுக்கப்படுகிறது.
எமது பரிந்துரைகள் :
1. முகாம்களில் உள்ள எல்லோரும் பதிவு செய்யப்பட்டு அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இங்கே பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் விரும்பினால் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இல்லையேல் அகதி எனப் பதிவு செய்து அட்டை வழங்க வேண்டும்.
2. பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கு அகதிகளாகப் பதிவு செய்துள்ளவர்களுக்கும் இந்திய குடிமக்களைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் விரும்பினால் இந்தியக் குடியுரிமை அளிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
3. கொடுக்கப்படும் உதவித் தொகை அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்யப் போதாது. குவாரன்டைனில் இருப்பவர்களுக்கு சாப்பாட்டிற்கு மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.35 செலவு செய்யப் படுகிறது. இதே தொகை முகாம்களில் உள்ளவர்க ளுக்கும் கொடுக்கப்படுதல் வேண்டும். 30ஒ35=1050 ரூபாய் மாதம் ஒன்றிற்கு ஒவ்வொரு பெரியவருக்கும் வழங்கப்படவேண்டும். குடும்பத் தலைவர், மற்றவர், ஆண், பெண் போன்ற பேதங்கள் கூடாது. 12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு ரூ.600/- வழங்கப் படுதல் அவசியம். முதற்குழந்தை, இரண்டாம் குழந்தை என்கிற வேறுபாடுகள் கூடாது.
4. ஒவ்வொருவருக்கும் 12 கிலோ அரிசி கிலோ 0.57 பைசா விலையில் கொடுப்பது பாராட்டுக்குரியது. தரமான அரிசியாகவும் எடை குறையாமலும் கொடுத்தல் அவசியம். இதை கண்காணிக்க அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
5. ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும் உடைகள், இருமுறையாக மாற்றப்படுதலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் பாத்திரங்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் அளிக்கப்பட வேண்டும்.
6. சர்க்கரை, கெரசின் ஆகியவற்றின் அளவுகள் உயர்த்தப்படுதல் வேண்டும். குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 10லி. கெரசின் கொடுக்கப்படுதல் அவசியம். இந்தியக் குடிமக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிற `ரேஷன்’கள் அனைத்தும் அதே அளவில் ஈழ அகதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
7. பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் (இலவச `கேஸ்’ தொலைக்காட்சி பெட்டி முதலியன) நிறைவேற்றப்படுகையில் ஈழ அகதிகளுக்கும் அவை நீட்டிக்கப்பட வேண்டும்.
8. 16 ஆண்டுகளாகப் பராமரிப்பில்லாத வீடுகள் உடனடியாக போர்க்காலத் துரிதத்தில் சீரமைக்கப் படவேண்டும். தார் அட்டை கூரைகள் மாற்றப்பட வேண்டும். நிரந்தர வீடுகள் கட்டும் பணி தொடங்க வேண்டும். குடோனில் குடியமர்த்தப்பட்டுள்ளவர் களுக்கு தனித்தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
9. அகதிக் குடியிருப்புகளை அருகிலுள்ள பஞ்சாயத்து/முனிசிபாலிட்டி/ நகராட்சி ஆகியவற்றுடன் இணைத்து குடிநீர் வசதி, துப்புரவு வசதி முதலியன செய்யப்பட வேண்டும். கிணறுகள் தூர்வாரப்பட வேண்டும்.
10. முகாம்களில் போதிய அளவில் கழிப்பறைகள் கட்டுவது உடனடித் தேவை, இருக்கிற கழிப்பறைகளுக்கு கதவுகள் போடுதல், நீர் வசதி செய்தல், செப்டிக் டாங்குகளைச் சுத்தம் செய்தல் முதலிய பணிகளைச் செய்ய வேண்டும்.
11. முகாம்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சாலைகள் இடுதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்.
12. முகாம்களில் எல்லா வீடுகளுக்கும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று விளக்குகளும், பிளக் பாயிண்ட் வசதியும் செய்து தரப்பட வேண்டும்.
13. மருத்துவ வசதிகள் அதிகப்படுத்துதல் வேண்டும். மாதம் ஒருமுறை முகாம்களில் `மெடிக்கல் காம்ப்”கள் நடத்தப்படவேண்டும். மண்டபம் முகாமில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி விரிவாக்க வேண்டும்.
14. மாணவர்களின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். உயர் கல்வியிலும், தொழிற் கல்வியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல அகதிகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாடநூற்கள், ப° பா° முதலியன இலவச மாய் வழங்கப்பட வேண்டும். முகாம்களுக்கு அருகிலுள்ள தரமான கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் முகாம் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென அரசு வற்புறுத்த வேண்டும்.
15. குழந்தைகள் காப்பகம், படிப்பகம் முதலிய குறைந்த பட்ச வசதிகள் உடையதாக மாற்றப்படுதல் அவசியம். குழந்தைகளுக்கு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சத்துணவு அளிக்கும் முறை தொடர வேண்டும்.
16. முகாம்களில் செயல்படுகிற சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு உடனடியாக ஏற்பு வழங்க வேண்டும். வெளியி லுள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும் எல்லா உதவிகளும் இவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். வங்கிகளில் இச்சுயஉதவிக் குழுக்களின் பெயரில் கணக்குகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.
17. முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். வெளியில் சென்று வேலை செய்ய உரிய அனுமதியை எளிதில் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் உரிய ஊதியம் கொடுக்கப் படுகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும். பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பிற் கும் அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதற்கு உரிய நடைமுறைகளை ஒவ்வொரு முகாமிலும் அரசு உருவாக்க வேண்டும்.
18. திருமண வயதிலுள்ள பெண்களுக்கு அரசு உதவித் தொகையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவக் கண்காணிப்பும் அளிக்க வேண்டும்.
19. முகாம்களில் உள்ளவர்கள் சிறுதொழில் செய்ய அரசு ஊக்குவிக்கவும், உதவி செய்யவும் வேண்டும். வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.
20. முகாம்களில் உள்ளவர்களைக் கந்து வட்டிக் கொடுமையி லிருந்து தப்புவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21. மண்டபம் முகாமிலுள்ள `குவாரண்டைன்கள்” ஒழிக்கப் பட வேண்டும். அகதிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
22. முகாம்களில் உள்ளவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு உள்ள தடைகளை நீக்கி எளிதாக்க வேண்டும்.
23. இராமேஸ்வரத்தை ஒட்டி கரையிறங்குகிற அகதிகளை உடனடியாக உரிய வாகன வசதிகள் செய்து முகாம்களுக்கு அழைத்துவர வேண்டும். தேவையான விசாரணைகள் எளிமைப்படுத்தப்பட்டு சுருக்கமாக செய்யப்படுதல் அவசியம். வந்திறங்குகிறவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதியும், உணவும் அளித்து முகாம்களுக்கு அழைத்து வரும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். இதற்குரிய வாகன வசதிகள் முகாம்களில் செய்யப்பட வேண்டும்.
24. முகாம்களில் உள்ளவர்கள் நியாயமான காரணங்களுக்காக முகாம்களை மாற்றிக்கொள்ள விரும்பினால் உடனடியாக அதற்கான ஆணை வழங்க வேண்டும். புதிய இடத்திற்குச் செல்வதற்கு உரிய பஸ்/ரயில் வாரன்ட்கள் வழங்கப்பட வேண்டும்.
25. தமிழகத்திலுள்ள இரு சிறப்பு முகாம்கள் என்பன சிறையைக் காட்டிலும் மோசமாக உள்ளன என அறிகிறோம். இம்முகாம்களில் உள்ளவர்கள் குறித்த விவரம், எவ்வளவு நாட்களாக இவர்கள் இங்கே உள்ளனர், யாரேனும் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டனரா முதலிய விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டும்.
26. முகாம் நிலைமைகளை ஆராய்வதற்கு பணியில் உள்ள உயர்நிதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
27. உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்டுள்ள நாடுகள் கையெழுத்திட்டுள்ள (1951 Convention Relating to the Refugees) 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை குறித்த உடன்பாட்டில் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை தொடர்பாக உடன் பாட்டிலும் இது தொடர்பான 1967 ஆம் ஆண்டு ஒப்பந்தத் திலும் (1967 Protocol on the status of Refugees) இந்திய அரசு உடனடியாக கையெழுத்திட வேண்டும்.
28. 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை குறித்த உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடாத போதும் வந்திறங்கும் அகதிகளைத் திருப்பி அனுப்பாத கொள்கைளை (The Principle of non-refoulment) அரசு கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. எனினும் சிறப்பு முகாம்களில் விசாரணையும் வழக்குமின்றிப் பல ஆண்டுகள் அடைத்து வைத்திருப்பது நிறுத்தப் படுதல் வேண்டும். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மொழி, நாடு, இனம் ஆகியவற்றால் வேறுபட்ட அகதிகளையும் வெவ்வேறு நிலைகளில் இந்திய அரசு நடத்தக்கூடாது. அகதிகள் நிலை தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை இந்திய அரசு உருவாக்க வேண்டும்.
29. தொண்டுள்ளம் கொண்ட தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அகதி முகாம்களைத் தத்து எடுத்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும்.
30. தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழ் அகதிகள் நிலை குறித்துக் கவனம் கொண்டு அவர்களின் உரிமைகளுக்காக கோரிக்கைகள் முன்வைப்பதும் போராடுவதும் அவசியம்.
31. முகாம்களில் உள்ளவர்கள் எம்மிடம் குறைகளைச் சொல்வதற்குத் தயங்கினர். அச்சப்பட்டனர். ஒவ்வொரு முகாமிலும் புகார்ப் பெட்டிகள் அமைத்து மாதந்தோறும் உதவி இயக்குநர் மட்டத்திலுள்ள அதிகாரிகளால் அவை திறந்து வாசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
32. ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவை முகாம் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் முகாம்களுக்குச் சென்று குறைகள் அறிய வேண்டும்.
குறிப்பு :
1. மண்டபம் முகாமைப் பார்வையிடுவதில் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைத்தனர். மறுவாழ்வுத் துறை உதவி இயக்குநர் திரு. வி. ஜெயக்குமார் அவர்கள் முழுமையான விவரங்களைக் கொடுத்து உதவினார். ஆனால், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தாசில்தார் அனுமதி பெற்றுச் சென்றும்கூட வருவாய்த் துறை ஆய்வாளர் திரு. தனசேகரன் என்பவர் அனுமதிக்க மறுத்துள்ளார்.
2. இது ஒரு இடைக்கால அறிக்கையே. முழுமையான இன்னும் விரிவான அறிக்கை புகைப்பட ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 18-07-2006அன்று வெளியிடப்பட்டது.
Leave a Reply