மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 10.11.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :-
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ள டாக்டர் V. குமாரசாமியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென்று புதுவை அரசை கேட்டுக்கொள்கிறோம். ஜாமீனில் வந்த டாக்டர் குமாரசாமி பிற டாக்டர்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு ஜிப்மர் மருத்துவமனையை கடந்த நான்கு நாட்களாக செயல்படவிடாமல் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பணம் கேட்டு மிரட்டியதாக பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். இது இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும். எனவே அவர் மேலும் சாட்சிகளை கலைக்காவண்ணம் அவரது ஜாமீனை ரத்து செய்ய சிறையில் அடைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர் குமாரசாமி செய்துள்ள குற்றம் பெண் இனத்துக்கே அவமானம் உண்டாக்குவதாகும். அவரால் பொதுவாக மருத்துவ தொழிலுக்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள அவர் மீது நடவடிக்கையெடுத்து ஜிப்மர் நிர்வாகம் அவரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இதை வலியுறுத்தி ஜிப்மர் இயக்குநருக்கு ஃபேக்ஸ் மூலம் புகார் அனுப்பியுள்ளோம்.
ஜிப்மர் டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடும் படியும், ஒரு குற்றவாளிக்கு துணை சென்று உயர்ந்த மருத்துவத் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென்றும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
Leave a Reply