மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :-
தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
சண்முகாபுரம் அண்ணா வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரை தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்துள்ளனர். துரை ரியல் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் நடந்த திருட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ரமேஷை தன்வந்திரி நகர் காவல்நிலைய காவலர்கள் கடந்த 03.06.1998 புதன்கிழமையன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை 07.06.1998 ஞாயிறு வரை சட்ட விரோதமாக காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அதன் விளைவாக அவர் இறந்து போயுள்ளார். இது தொடர்பாக ரமேஷின் தந்தையார் அரிகிருஷ்ணன் புகார் ஒன்றை தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், உண்மைக்கு மாறாக ரமேஷ் விஷ விதைகளைச் சாப்பிட்டு வெளியில் இறந்துவிட்டார் என்று போலீசார் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ரமேஷின் வழக்கை காவல்நிலைய கொலை (LOCK-UP DEATH) வழக்காக பதிவு செய்யும்படி புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
ரமேஷின் கொலைக்கு காரணமான காவலர்களையும், அதிகாரிகளையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யும்படி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ரமேஷின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படியும் புதுவை அரசை கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply