மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.12.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:
துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடர உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரி அரசு 2600 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை செயல்படுத்த கடந்த 2005-ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இந்த ஒப்பந்தப்படி அரசுக்கு சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மேலும், தேங்காய்த்திட்டு உள்ளிட்ட பகுதிகளை கையகப்படுத்தி தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முயற்சித்தது.
இத்திட்டத்தினால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே ஆபத்து ஏற்படும், மக்களின் வாழ்வாதாரங்கள் சீரழிந்துவிடும் என அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து தீவிரமாக எதிர்த்துப் போராடின. இதனால், இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்தது. இந்தப் போராட்டங்களில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், துறைமுக விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த இருந்த தடை நீங்கியது. அரசும் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 14.05.2009 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய மேற்சொன்ன தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரும்பப் பெறவும் அல்லது திருத்தம் செய்யவும் கோரியுள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் சட்ட விதி மீறல் நடந்துள்ளதையும், பெரும் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள துறைமுக பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது என்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரசு நிலத்திற்கு வாடகை நிர்ணயம் செய்துள்ளது குறைவானதாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு நிலத்திற்கு வாடகையாக குறைந்தபட்சம் நிலத்தின் மதிப்பில் 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் புதுச்சேரி அரசுக்கு வாடகையாக ஆண்டுக்கு 14.5 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும். ஆனால், ஆண்டுக்கு வெறும் ரூபாய் 3.06 லட்சம் வாடகை நிர்ணயம் செய்துள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் கூறியுள்ளது.
அதோடு மட்டுமல்லாது, துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து ‘மத்திய கண்காணிப்பு ஆணையம்’ விசாரணை மேற்கொண்டு வருவதையும் எடுத்துக் கூறியுள்ளது.
புதுச்சேரி அரசு கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்து மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதற்கு துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
எனவே, புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தோடு செய்துக் கொண்ட சட்ட விரோத ஒப்பந்தத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல், மீண்டும் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.
Leave a Reply