மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 05.12.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை:
பொய் வழக்கில் பேராசிரியர் கல்யாணி, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் ராசேந்திர சோழன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கடலூர் மாவட்டப் பொது பொறுப்பாளர் வழக்கறிஞர் சேட்டு உட்பட ஒன்பது பேர்களை விழுப்புரம் போலீஸ் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்களை தமிழ்நாட்டு போலீஸ் ஆயிரக்கணக்கில் கைது செய்துள்ளது. இதைப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. உயர்நீதிமன்றமும் தமிழக அரசை எச்சரித்துள்ளது. இப்படியான ஜனநாயக விரோத போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்ததற்காக பேராசிரியர் கல்யாணியையும் பிறரையும் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக சதி செய்ததாக வழக்குப் போட்டுள்ளனர். அவசர நிலை காலத்தை விடவும் மோசமாக போலீஸ் ராச்சியமாக தமிழ்நாடு மாறிவிட்டதற்கு இதுவே உதாரணம். இந்த மக்கள் விரோதப் போக்கை எதிர்க்கும்படி அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
டிசம்பர் 6-ந் தேதியைக் காரணம் காட்டி 6600 பேர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளதாகவும் அதில் 1600 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது எஞ்சியுள்ள 5 ஆயிரம் பேர்கள் தலித்து மக்களேயாவார்கள். இப்படிப் பெருமளவில் கைது செய்து அவர்களை பொய் வழக்குகளில் சிறையில் அடைப்பது தங்களது கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த அவர்களுக்குள்ள உரிமையை மறுப்பதாகும். தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யும்படி வேண்டுகிறோம்.
Leave a Reply