உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசு அருந்ததியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்த இடஒதுக்கீடு அபோதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான எம்.எஸ்.ஜனார்த்தனம் ஆய்வறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அந்த வகுப்பினரின் உட்பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கலாம் எனத் தீர்ப்பில் கூறியுள்ளது.

மேலும், கூட்டாட்சி கட்டமைப்பில் இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறும் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது.

புதுச்சேரியில் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென அச்சமூக மக்களும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பல காலமாகப் போராடி வருகின்றன.

கடந்த 06.07.2016 அன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சக்கிலியர் சமூகத்தை அருந்ததியர் என பெயர் மாற்றம் செய்வது, அம்மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் இதனைச் செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*