புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. போதிய பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. கோரோனா மருத்துவமனையான கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் அளித்த அறிக்கையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாகக் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் முழு ஊரடங்கு செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த கொரோனா தடுப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஊரடங்குக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000, உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். கோரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட மனுவில் கோரியுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை நேற்று (08.09.2020) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மு.ஞானசேகர், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் என்.மாலா ஆஜராகி வாதிட்டனர்.
புதுச்சேரியில் கோரொனா தொற்று அதிகமாக இருப்பதால் நீதிபதிகள் இதை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். எதிர்மனுதாரர்களான மத்திய உள்துறை செயலர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், சுகாதாரத் துறை செயலர், மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாகி, ஏனாம் தலைமைச் செயல் அதிகாரிகள் 6 வாரத்திற்குள் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave a Reply