புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (24.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தலைப் புதுச்சேரி ஆட்சியாளர்கள் முடக்கி வைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2006ஆம் ஆண்டு புதுச்சேரியில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தல் மூலம் கிராமப் பஞ்சாயத்து, கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி என 113 நிறுவன அமைப்புகள் மூலம் 1138 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினர். இந்தப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2011ஆம் ஆண்டு முடிவுற்றது. அதன் பின்னர் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73 மற்றும் 74வது திருத்தச் சட்டங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள், இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் புதுச்சேரிக்கு ஆண்டுக்கு ரூ. 420 கோடி கிடைக்கும். அவ்வாறு பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு ரூ. 4200 கோடி நிதியினைப் புதுச்சேரி அரசு மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்க முடியும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் மட்டுமே தற்போதைய நிதி மற்றும் நிர்வாக நெருக்கடி தீரும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை விடுத்து, ஆளுநரும் முதல்வரும் தேவையில்லாமல் அன்றாட குடுமிப்பிடி சண்டை போடுவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் நடைபெற்றால் தான், நகரம் மற்றும் கிராமங்களில் சுகாதாரம், சாலை, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஊழலின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த முடியும்.
எனவே, மக்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்,
கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.
லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.
கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.
சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.
கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.
தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.
பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.
புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.
Leave a Reply