புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.01.2021) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. இதற்கான கோப்பை மத்திய அரசுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுப்பி வைத்தார். இதற்கு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணம், டியூஷன் கட்டணம், ஆய்வகம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் என முழுவதையும் அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் ஏற்றத்திற்கான இத்திட்டத்தை மனதார வரவேற்கிறோம்.
இதேபோல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கண்டனம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனவே, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றது போல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
இல்லையேல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி இக்கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply