மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.08.2019) விடுத்துள்ள அறிக்கை:
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன்மீது கருத்துக் கேட்டது. இதனை எதிர்த்துப் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை வரைவில் இந்தி, சமஸ்கிரதம் கட்டாய திணிப்பு, 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தொழிற்கல்வி, கலை, அறிவியல் படிப்பு உட்பட உயர்கல்விப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் தகுதித் தேர்வு எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்வி ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு சென்றுவிட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கையின்படி கல்வி முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படும் ஆபத்துள்ளது.
அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் சமமாகக் கருதப்பட்டு தனியார்மயம் ஊக்குவிக்கப்படும். கல்விக் கட்டணம், புதிய பாடங்கள் தொடங்குவது உட்பட அனைத்தையும் தனியார் பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், கல்வி சேவை என்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க வணிகமயமாகும்.
இப்படிப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
புதுச்சேரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செயல்பாடிற்கு வந்த பின்னரே முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அதன் பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளனர். இதுபோன்ற காலங்கடந்த நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை.
எனவே, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
Leave a Reply