போலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது:
இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட காவலதிகாரிகளோ, காவல்துறை உயரதிகாரியோ தீர்மானிப்பது இல்லை. குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் கொலைகள் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலைச் செய்வது நடந்தது.
ஆனால், இன்று குஜராத்திலும், மும்பையிலும் போலிமோதலில் இஸ்லாமியர்களைக் குறி வைத்துள்ளார்கள். மும்பையில் தாதாக்களைக் கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு தாதா குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு தாதா குழுவில் உள்ளவர்களைச் சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீசுவரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ்காரர்களைப் பத்திரிகைகளும், அரசாங்கமும் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள்’ என்று சொல்லி, இதற்காவவே இவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி, என்கவுண்டருக்கு ஆதரவாக ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
1996-ஆம் ஆண்டு ஆந்திராவில் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டபோது, இந்திய அளவிலான உண்மை அறியும் குழு அமைக்கப்பட்ட போது, அதில் நானும், இங்குள்ள பேராசியர் சரஸ்வதி அவர்களும் பங்குபெற்று, ஆந்திராவில் நக்சல்பாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தோம். அந்த ஆண்டில் மட்டும் 165-க்கும் மேற்பட்டவர்கள் மோதல் என்ற பெயரில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு போலிமோதல் நடந்த இடத்தை பத்திரிக்கையாளர்கள் சென்று பார்த்தபோது, அங்கு சில இடங்களில் போலீசார் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த பள்ளங்கள் எல்லாம் நக்சல்பாரிகள் குண்டு வீசியதால் ஏற்பட்டது என்று பின்பு காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளனர். ஆந்திராவில் பல மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று வாராங்கல் மாவட்ட ஆட்சியரே எங்களிடம் கூறினார். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்துகொண்டு ‘லேப்டாப்பில்’ கிராமங்களை இணைப்பதாகக் கூறிகொண்டிருந்த நேரம்.
மக்களுக்காகப் பள்ளிகளை நடத்துவது, தண்ணீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற மக்களுக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொண்டிருந்த இயக்கத்தைச் சேராத, அந்த பொதுநலவாதிகளை எல்லாம் ஆந்திர அரசு நக்சலைட் என்ற பெயரில் சுட்டுக் கொன்றது. 1996-1998 காலகட்டத்தில்தான் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் போராட்டங்களும் நிறைய நடந்தது. அதன் தொடர்ச்சியாகத்தன் தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர் நடந்தால் உடனடியாக அதை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது இ.த.ச பிரிவு 302-இன் படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரரேசங்களுக்கும் பிறப்பித்தது. ஆனால், இதை யாரும் கண்டுகொள்வது இல்லை.
கடந்த மாதம் 26-ஆம் தேதி மும்பையில், போலி மோதல் படுகொலை குறித்து ஒரு இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது. ஆந்திரா, குஜராத், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து நானும், முத்துலட்சுமிவீரப்பன், அக்னி சுப்ரமணியன் போன்றோர் பங்கேற்றோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட பல்வேறு இசுலாமிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போதுதான், இதுவரையில் இந்தியாவில் மோதல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுப்பட்டியல் நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்தோம். இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளைத் தொகுப்பதற்காக, இங்கு வந்துள்ள மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில் ஒரு ஆவணப் பதிவகம் தொடங்கப்பட்டது.
இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்களை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 24 பேர் போலி மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவியை, திமுக தேர்தலில் நிற்கவைத்து போலி மோதலுக்கு எதிராக இருப்பதாகக் கூறி வாக்குகளைப்பெற்று இன்று மத்திய அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. ஆனால், இன்று இந்த திமுக ஆட்சியில்தான் 8 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தஞ்சைப் பகுதியில் முட்டை ரவி என்பவரை போலீசார் படுகொலை செய்தனர். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திமுகவிற்கும் நெருக்கமானவர். கோபமுற்ற கள்ளர்களைச் சமாதானம் செய்வதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த மணல்மேடு சங்கரை கொலைச் செய்தனர்.
மணல்மேடு சங்கர் நீதிமன்றக்காவலில் இருக்கும்போது, தான் போலீசாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வழக்கில், நீதிமன்றத்தில் காவலதிகாரி ஜாபர்சேட், என்கவுண்டர் போன்ற திட்டம் எதுவும் இல்லை, அப்படி எதுவும் செய்யமாட்டோம் என்றும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என்றும் கூறினார். ஆனால், அடுத்த சிலவாரங்களில் மணல்மேடு சங்கர் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டார். இதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக பாமகவிற்கு தொல்லை தரவேண்டும் என்பதற்காக, அக்கட்சிக்கு ஆதரவாக இருந்த பங்க் குமார் என்பரை கொலை செய்தனர்.
காவல்துறை இன்று அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை செய்வதற்கு என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் மோசமான நிலை.
இப்போது விஜயகுமாரை தேனி மாவட்டத்திற்கு நக்சல்பாரிகளைப் பிடிப்பதற்காக அனுப்பி இருக்கிறார்கள். வீரப்பனைப் பிடிக்க அனுப்பப்பட்ட காவலதிகாரிகள் பலரும் விஜயகுமாருடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். இன்று சட்டத்தின்படி பார்த்தால் விஜயகுமார் ஒரு கொலைக் குற்றவாளி். இதுவரை 12 பேரை போலிமோதல் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்துள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துசெல்லும் வழியில் ராஜாராமனை சுட்டுக் கொன்றார்கள். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த் சரவணன் என்பவரை, ராஜாராமனை கடத்த முயன்றதாகக் கூறி சுட்டுக் கொன்றார்கள். இதெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலைகள். இத்துடன் வீரப்பன் படுகொலையும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் உள்ளது. சி.பி.ஐ விசாரணைக் கேட்டு போடப்பட்டுள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் தேனி மாவட்டத்திற்கு விஜயகுமாரை அனுப்பியிருப்பது என்பது, தமிழக அரசு அப்பட்டமாக என்கவுண்டர் செய்வதை ஆதரிக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
எனவே, அரசு உடனடியாக விஜயகுமாரை அப்பகுதியிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டும். விஜயகுமார் குழுவினரை பெரியகுளம் பகுதிக்கு அனுப்புவதன் மூலம், ஏதோ அந்தப் பகுதியே மிகமோசமான, பதட்டமான பகுதி என்பது போன்ற தோற்றத்தை அரசு உருவாக்குகிறது.
இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடப்பது முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரி்கைகளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரைக் கொலைச் செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு கடலூர் பதிப்பு மாலைமலர் செய்தித்தாளில் , சிதம்பரம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால், தற்போது கோவை சிறையில் உள்ள வல்லம்படுகை சந்திரன் என்பவரை என்கவுன்டர் செய்வதற்காகத் திட்டமிட்டுள்ளார்கள் என தெரியவந்தது.
இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்துக் கொண்டிருக்கின்றது.
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைதுசெய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல், நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்துவதில்லை. நீதித்துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல் குறித்தும் நாம் பேசவேண்டும்.
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் மட்டுமே என்கவுன்டர் என்ற பெயரில் கொலைச் செய்யப்படுவதில்லை. போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் என்ற பெயரில் கொலைச் செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.
நம்முடைய உரிமையைக் காப்பதற்காகத்தான் என்கவுன்டர் வேண்டாம் என்கிறோம். அரசியல் சட்டமும் வேண்டாம் என்கிறது. நக்சல்பாரி இயக்கத்தினரும், தமிழ்த் தேசிய அமைப்பினரும் இதை அரசியல் ரீதியானப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டிற்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை தங்கினார். மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ், எழுத்தாளர் பிரபஞ்சன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் பாவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் பேராசிரியை சரஸ்வதி, தாருல் இசுலாம் அமைப்பு குலாம் முகமது, தமிழக மனித உரிமைக் கழகம் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசிய வழக்கறிஞர் நடுவம் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர் கபிலன், மனிதம் அக்னி சுப்பிரமனியம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயம் மனோகரன், பேராசிரியர் சிவகுமார், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் வெ.பாலு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர்-கவிஞர் கனகவேல் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஆந்திராவிலிருந்து ஆந்திர சிவில் உரிமைக் குழு சார்பில் கிராந்தி சைத்தன்யா, கர்நாடகாவிலிருந்து மக்கள் ஜனநாயக கழகம் சார்பில் பேராசிரியர் இராமசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
Leave a Reply