மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.11.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:
ஹெல்மெட் மோசடி வழக்கின் முக்கிய சாட்சியான புஷ்பராஜ் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால், அவ்வழக்கை சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் ஓர்லயன்பேட்டை ஒத்தவாடை வீதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் காவல்துறை தலைமையகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய போது ஹெல்மட் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சி.பி.ஐ. போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. டொமினிக் மற்றும் சாட்சியான புஷ்பராஜ் அகியோரை நேற்றைய தினம் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இருவரும் சென்னை சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையில் பங்கேற்று விட்டுத் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மேற்சொன்ன அதிகாரி புஷ்பராஜ் திடீரென இன்று காலை தற்கொலை செய்துக் கொண்டு இறந்துப் போயுள்ளார்.
அவர் தற்கொலைக்கு சி.பி.ஐ. போலீசார் தான் காரணம் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அவரது உறவினர்கள் சி.பி.ஐ. விசாரணையில் உண்மையை கூறக் கூடாது என்று இவ்வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி ஒருவர் தூண்டுதலின் பேரில் சில ரவுடிகள் புஷ்பராஜை பலமுறை மிரட்டியதாக கூறியுள்ளனர். சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்ட தினத்திற்கு முன்நாளன்றுகூட அவர் தன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது ரவுடிகள் மிரட்டியுள்ளதாக கூறியுள்ளனர்.
புஷ்பராஜ் தற்கொலைக்கு சி.பி.ஐ தான் காரணமா அல்லது வேறு யார் காரணம் என்ற உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமை. முக்கிய ஊழல் வழக்கு ஒன்றில் சாட்சியான புஷ்பராஜ் தற்கொலை செய்துக் கொண்டதில் மர்மம் நீடிக்கிறது.
எனவே, புஷ்பராஜ் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், சி.பி.ஐ.யில் உள்ள எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒருவரையோ அல்லது அதற்கும் மேலுள்ள அதிகாரியையோ விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
Leave a Reply