காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2019) விடுத்துள்ள அறிக்கை:

பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

 கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் ஜெயமூர்த்தியை சென்ற 21.11.2018 அன்று பாகூர் போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் போலீசார் காவல்நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்து அடித்துத் துன்புறுத்தி சித்தரவதைச் செய்துள்ளனர்.

பின்னர் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் ஜெயமூர்த்தியை சிறை அதிகாரிகள் அடித்துள்ளனர். மேலும், உடலெங்கும் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயமூர்த்திக்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவரை வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை அளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 27.11.2018 அன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயமூர்த்தியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துச் சிகிச்சை அளித்தனர். ஆனால், அன்றைய தினமே சிகிச்சைப் பலனின்றி ஜெயமூர்த்தி இறந்துப் போனார்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு நீதித்துறை நடுவர் சரண்யா தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. இறந்துப் போன ஜெயமூர்த்தியின் பிரேதப் பரிசோதனை ஜிப்மர் மருத்துவர் குழுவால் செய்யப்பட்டது.

சம்பவத்தை விசாரித்த நீதிபதி அளித்த அறிக்கையின் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், ஏ.எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இறந்துப் போன ஜெயமூர்த்தி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் வழக்கில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளைச் சேர்க்க உத்தரவிட கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் காவலர் புகார் ஆணையத்தில் (Police Complaints Authority) புகார் அளித்தோம்.

இப்புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவர், உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி இராஜசூர்யா வழங்கிய உத்தரவின்படி இவ்வழக்கில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. வழக்கு விசாரணை பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டு, அப்பிரிவின் எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போழுது வழக்கு விசாரணையை பி.சி.ஆர். பிரிவுப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Rules, 1995) கொலை அல்லது இறப்புச் சம்பவத்திற்கு மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இதில் 50 சதவீதம் பிரேதப் பரிசோதனை முடிந்து அறிக்கை வந்தப் பின்னும், 50 சதவீதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்த பின்பும் அளிக்க வேண்டும்.

சென்ற 01.04.2019 அன்று பி.சி.ஆர். பிரிவுப் போலீசார் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருக்கு நிவாரணம் அளிக்க வேண்டி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

எனவே, புதுச்சேரி அரசு இனியும் காலம்தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*