மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.01.2019) விடுத்துள்ள இரங்கல் செய்தி:
போர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த போதும், வீரப்பனால் கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தப்பட்ட போதும் அவரோடு தொடர்பில் இருந்துள்ளேன்.
1997-இல் புதுச்சேரியில் ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு நடத்தினோம். அதில் கலந்துக் கொண்டதோடு டில்லியில் இதேபோல் மாநாடு நடத்துவேன் என்று அறிவித்து நடத்தியவர். டில்லியில் மாநாடு தடை செய்யப்பட்ட போது தன் வீட்டிலேயே மாநாடு நடத்தி ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்தவர்.
1987-இல் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியங்களைப் புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டவர்.
தலைசிறந்த தொழிற்சங்கத் தலைவராக விளங்கியவர். மிசா கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்.
சிறையிலிருந்தே பிகார் மாநிலம் முசாபர் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற மக்களைவை உறுப்பினராக 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர். ஒன்பது முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சிறந்த பாராளுமன்றவாதி.
மொராஜ் தேசாய் பிரதமராக இருந்த போது தொழில் துறை, வி.பி. சிங் காலத்தில் ரயில்வே துறை, வாஜ்பாய் காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
பழகுவதற்கு எளிய மனிதர். சிறந்த பத்திரிகையாளர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Leave a Reply