இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1)    இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய – தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2)    கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3)    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4)    மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*