புதுச்சேரியில் அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (05.12.2018) விடுத்துள்ள அறிக்கை:

காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம் குறித்து விசாரித்த காவலர் மீதான புகார் ஆணையத்தின் (Police Complaints Authority) தலைவரும், உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியுமான இராஜசூர்யா ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மூன்று மாதத்திற்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்’ என டி.ஜி.பி.க்கு கடந்த 29.08.2018 அன்று உத்தரவுப் பிறப்பித்தார். ஆனால், மூன்று மாதத்திற்கு மேலாகியும் இதுவரையில் புதுச்சேரி காவல்துறை இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

பாகூர் காவல் நிலையத்தில் ஜெயமூர்த்தி என்ற தலித் இளைஞர் போலீசாரால் அடித்துத் துன்புறுத்தியதால் நீதிமன்ற காவலில் இறந்துப் போனார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate No. 4) பாகூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டாலும் அதன் பதிவுகள் டி.ஜி.பி. அலுவலகத்தில் பதிவு செய்துப் பாதுகாக்கும் வகையில் வழிவகைச் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காவல்நிலையங்களில் காவல் மரணம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும்.

எனவே. காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*