மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.11.2018) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் தலித் இளைஞர் ஜெயமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகர், புதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 22) கடந்த 21 அன்று பாகூர் போலீசார் கைது செய்தனர். அவரை மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் சிறையில் உடல்நலம் குன்றிய அவரைப் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 27 அன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பாகூர் காவல் நிலையத்திலும், காலாப்பட்டு சிறையிலும் அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி கவுசல்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜெயமூர்த்தியை போலீசார் பிடித்துச் சென்றபின் பாகூர் காவல் நிலையத்திற்குச் சென்று அவரைப் பார்த்த போது தலைக் கவிழ்ந்தபடி நிற்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார். இது ஜெயமூர்த்தி போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால்தான் இறந்தார் என்பதை உறுதி செய்கிறது.
மேலும், நீதிமன்றத்திற்கு ரிமாண்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறைவாசிகள் ஜெயமூர்த்தியை போலீசாரும், சிறைத்துறையினரும் அடித்துத் துன்புறுத்தியதால் இறந்துப் போனார் எனப் புகார் கூறியுள்ளனர். ஜெயமூர்த்தியை சிறையில் அடைக்கப் போலீசார் கொண்டு வந்தபோது சிறைத்துறையினர் அவருக்கு வெளி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.
போலீசார் ரிமாண்டிற்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தும் போது பல சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் கைதிகளைப் பார்க்காமலேயே ரிமாண்டு செய்கின்றனர். கைதிகளிடம் போலீசார் துன்புறுத்தினார்களா என்று கேட்டுப் பதிவு செய்து, தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இதுபோன்று நடவடிக்கை எடுக்காததால்தான் கைதிகள் உரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, புதுச்சேரி அரசு ஜெயமூர்த்தியின் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர், சிறைத்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
உயிரிழந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் இளைஞர் ஜெயமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய எஸ்.சி. ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.
Leave a Reply