நாள்: 25.10.2018 வியாழன், நேரம்: காலை 10.00 மணி
இடம்: செகா கலைக்கூடம், புதுச்சேரி.
அன்புடையீர், வணக்கம்.
புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் 1985-இல் தொடங்கப்பட்ட போது அதற்கென பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் (Pondicherry University Act 1985) புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் தமிழ், பிரெஞ்சு மொழிகளுக்குத் தனியே துறைகள் உருவாக்கப்பட்டன. அதேபோல், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு 1994–1995 கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 18 படிப்புகளில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், அதன்பின்னர் 38 படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இப்படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்தும் இதுவரையில் வழங்கப்படவில்லை. மேலும், தற்போதைய துணைவேந்தர் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க இயலாது எனக் கூறியுள்ளார். இது புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும்.
எனவே, புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்துப் படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திடும் வகையிலும், இதுகுறித்து அடுத்தக்கட்ட செயல்பாடுகளைத் திட்டமிடவும் மேற்கண்டவாறு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம்.
தாங்கள் தங்கள் கட்சி / அமைப்பு சார்பில் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொண்டு கோரிக்கை நிறைவேற அனைத்து வகையிலும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மிக்க நன்றி.
இவண்,
கோ. சுகுமாரன், செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
பேச: 9894054640.
Leave a Reply