இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களைத் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (15.10.2018), காலை 10 மணியளவில், தலைமை அஞ்சலகம் அருகே தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டது.
இராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூடி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது தமிழக ஆளுநர் இன்னமும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் தேவ பொழிலன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கெளரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன், மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அமைப்பாளர் ஶ்ரீதர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை பொறுப்பளர் சீனு.தமிழ்மணி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், சுற்றுச்சூழல் கழகப் பொறுப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, தமிழர் தேசிய முன்னணி செயலர் இரா.இளமுருகன், புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை பொறுப்பாளர் இ.கோவலன், பழங்குடியினர் மக்கள் விடுதலை இயக்கச் செயலாளர் ஏகாம்பரம், மக்கள் நற்பணி இயக்கத் தலைவர் வி.மாறன், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், நேதாஜி பேரவை மாறன்வேல், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேலுசாமி, மாணவர் பொதுநல தொண்டியக்கப் பொறுப்பாளர் கு.அ.தமிழ்மொழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி, சமூக அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர்.
மேலும், புதுச்சேரி முழுவதும் கிராமப்புறங்களில் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் தொடர்ந்து நடைபெறும்.
Leave a Reply