நக்கீரன் கோபால் கைது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2018) விடுத்துள்ள அறிக்கை:

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி வழக்கில் தமிழக ஆளுநரை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நக்கீரன் கோபால் அவதூறாக செய்தி வெளியிட்டு இருந்தால் அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப் (Deformation Case) பதிவு செய்திருக்கலாம். அவதூறாக செய்தி வெளியிட்டாரா இல்லையா என நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்திருக்கும். அதைவிடுத்து ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் மீது நேரடியாக குற்ற வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

மேலும், நக்கீரன் கோபால் மீது தேச துரோகச் சட்டப்படி (Sedition Act) வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. தேச துரோகச் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டுமென அண்மையில் சட்ட ஆணையம் (Law Commission) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டப் பிரிவுகள் அவர் மீது ஏவப்படுவது அப்பட்டமாகப் பழிவாங்கும் செயலாகும்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளது கருத்துரிமைக்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவாலாகும்.

எனவே, நக்கீரன் கோபால் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*