தட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம்: ராஜீவ் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் மீதான புகார் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி. தெய்வீகன் ஆகியோர் இன்று (07.09.2018) செகா கலைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தட்டாஞ்சாவடி செந்தில் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 04.11.2017 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், 05.11.2017 அன்று அப்போதைய சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் தனது அலுவலத்தில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஊடகத்தினர் முன்னிலையில் அவரை முட்டிப் போட வைத்தார். இந்தச் சம்பவம் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியானது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும்.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி.தெய்வீகன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி ஜி.இராஜசூர்யா தலைமையிலான காவலர்கள் மீதான புகார் ஆணையத்தில் தனித்தனியே புகார் அளிக்கப்பட்டது. மேலும், செந்தில் முட்டிப் போட வைத்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள், பத்திரிகைகளில் வந்த செய்திகள், சிடி ஆகியவையும் அளிக்கப்பட்டது.

இப்புகார்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஆணையம் புகார்தாரர்கள், சிறையில் உள்ள தட்டாஞ்சாவடி செந்தில் ஆகியோரிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துக் கொண்டது. பின்னர், இதன் அடிப்படையில் அப்போதைய சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. ராஜீவ் ரஞ்சனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரும் எழுத்து மூலம் தனது விளக்கத்தைத் தாக்கல் செய்தார். இதன்பின்னர், அனைத்தையும் கவனமாக பரிசீலித்த காவலர்கள் மீதான புகார் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜி.இராஜசூர்யா, உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன், எம்.பிரேமலதா மலர்மன்னன் ஆகியோர் சென்ற 29.08.2018 அன்று தனித்தனியே மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

காவலர்கள் மீதான புகார் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளில் கூறியிருப்பதாவது:-

சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டப் பிரிவு 5ன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் ஒருவரைப் புலன் விசாரணைக்காகவோ அல்லது நடவடிக்கைக்காகவோ புகைப்படம் எடுக்கவோ அல்லது அளவு எடுக்கவோ முதல் நிலை நீதித்துறை நடுவரின் உத்தரவின்படிதான் செய்ய வேண்டும்,

மேலும், தமிழ்நாடு காவல்துறை நிலை ஆணைகள் பத்தி 646-ன்படி விசாரணை சிறைவாசிகளைப் புகைப்படம் எடுக்கப் பொதுவாக அனுமதியில்லை. இருந்தாலும் சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டப் பிரிவு 4 மற்றும் 5-ன்படி சில கட்டுப்பாடுகளுடன் புகைப்படம் எடுக்கலாம் எனக் கூறியுள்ளது.

சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருந்தால் நீதித்துறை நடுவரை அணுகி அனுமதிப் பெற்று எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. மேலும், கொடும் குற்றவாளிகளை ஊடகத்தினர் முன்னைலையில் காண்பிப்பது வழக்கம் என்றும் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார். இது சட்டத்திற்கு எதிரானது.

மேலும், ராஜீவ் ரஞ்சன் தனது விளக்கத்தில் செந்தில் அவராகவே முன்வந்து முழங்காலிட்டு அமர்ந்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார். ஆனால், செந்தில் சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. மேஜைக்கு முன்னால் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறையினர் இருக்கும் போது தரையில் முட்டிப் போட வைத்துள்ளது தெளிவாகிறது.

செந்திலை புகைப்படம் எடுத்ததும், தரையில் முட்டிப் போட வைத்ததும் சட்டம் மற்றும் மனித உரிமைகள் மீறலாகும். ஆகவே, ராஜீவ் ரஞ்சன் செய்தது முறையற்ற நடத்தை (misconduct) என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவைக்கை எடுத்து மூன்று மாதத்திற்குள் டி.ஜி.பி. அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாள்தோறும் ஊடகத்தினர் மற்றும் கேமராமேன்கள் முன் நிறுத்தப்பட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தடுக்கப்பட வேண்டும். இதுபற்றிப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுகுறித்து டி.ஜி.பி. மூன்று மாதத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் உரிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து டி.ஜி.பி. மூன்று மாதத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி டி.ஜி.பி. மேற்சொன்ன உத்தரவுகளை நிறைவேற்றி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*