மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.07.2018) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி முத்தரையர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குநரின் வாய்மொழி உத்தரவால் மாற்றுச் சான்றிதழ் அளித்து பள்ளியைவிட்டு வெளியே அனுப்பியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் உள்ள இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை நடத்தப்படுகின்றன.
முத்தரையர்பாளையத்தில் ஏராளமான ஆங்கில வழித் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் இப்பள்ளியில் இந்த ஆண்டு 6, 7, 8ம் வகுப்புகளில் மாணவர்கள் யாரும் சேரவில்லை.
இந்நிலையில், ஆசிரியர்களும், துணை முதல்வரும் மாணவர்களைச் சேர்க்கும் நோக்கில் 6ம் வகுப்பு ஆங்கில வழியில் நடத்தப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இதன்மூலம் அப்பகுதியில் உள்ள 13 மாணவர்கள் 6ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குமார் அவர்கள் பள்ளியின் துணை முதல்வரிடம் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்துப் பள்ளியை விட்டு அனுப்புமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதிதாக சேர்ந்த 13 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் அளித்துப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக் குறைந்து வரும் வேளையில் கல்வித்துறை இயக்குநரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ந.ரங்கசாமி, சொல்லாய்வறிஞர் ப.அருளி போன்ற பல்வேறு ஆளுமைகள் பயின்ற பள்ளி இன்றைக்கு மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
எனவே, இதுகுறித்து கல்வித்துறைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply