ஒரு முன்குறிப்பு:
(11 ஆம் வகுப்பு புதிய பொருளியல் பாடநூல் குறித்த பதிவு. இன்று உலகப் பொருளாதாரமே WTO (World Trade Organization) கைகளில். இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய ‘டங்கல் திட்டம்’. இதனால் உருவாக்கப்பட்டதே GATT (General Agreement on Tariffs and Trade) ஒப்பந்தம். டங்கல் ஒரு வழக்கறிஞர் என்று கேள்விப்படுகிறேன். பொருளியல் பாடத்தை விமர்சிக்கும் அளவிற்கு அப்பாடப்புலமையோ, அறிவோ எனக்கில்லை. வழக்கம்போல எனது கருத்துகளை சொல்லிக் கொண்டுள்ளேன்.)
பொருளியல் பாடம் நமது பள்ளி மாணவர்களுக்கு புதிதல்ல. சென்ற பாடத்திட்டத்துடன் சமூக அறிவியலில் பொருளியல் இணைக்கப்பட்டது. மேலும் 8, 9 வகுப்புகளுக்கு தேசியப் பங்கு மாற்றகம் (NSE) பொருளியல் பற்றிய அறிமுகப் பாடநூலை அளித்துள்ளது. எனவே 11 ஆம் வகுப்பில் பொருளியல் படிப்பது மிக எளிமையாக இருப்பது இயல்பு. புதிய பாடநூலைக் கடினம் என்று சொல்வது சரியல்ல.
வகை, தொகை நுண்கணிதம், MS wrd, MS excel, Power Point ஆகியன பாடத்தில் இணைத்திருப்பது சிறப்பு. தமிழ் போன்ற இதர பாடஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு பொருளியல் பட்டம் பெறுவது இங்கு வாடிக்கை. அவர்களில் சிலர் இப்பாடத்தைக் கண்டதும் அதிர்ந்து, கணிதமா, பொருளியலா என்று முகத்தைப் புதைத்துக்கொண்டு புலம்புவது நியாயமல்ல என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
“விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றிப் படிக்கும் ஓர் அறிவியல்”, (பக். 4) இலயனல் ராபின்ஸ் ‘பற்றாக்குறை இலக்கணம்’ சொல்கிறது. இதைப் படித்ததும் ஏழாம் வகுப்புப் பொருளியல் பாடம் குறிப்பு எழுதிய குறிப்பு நினைவிற்கு வருகிறது. அதிலிருந்து சில பத்திகளை கீழேத் தருகிறேன். (ஜனவரி 22, 2018)
“இலயனல் ராபின்ஸ் (Lionel Robbins) அவர்களின் பொருளியல் விளக்கம் இவ்வாறு தரப்படுகிறது. ‘லயனல்’ என்று சொல்வது தமிழ் மரபல்லவே; எனவே ‘இலயனல்’ ஆவதைக் கவனிக்க! இதைப்போலவே ‘ரப்பர்’ என்பது ‘இரப்பர்’ ஆவதையும் கண்டு ரசிக்கலாம்! இந்த விக்கிபீடியா பாணி மொழிபெயர்ப்பு எரிச்சல் தரவல்லது. அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘இலயனல் இராபின்சு’ என்பர்.
“விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியல் பொருளியலாகும்”, (பக். 216, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவம் – தமிழ் வழி)
ஆங்கில வழியில் கீழ்க்கண்டவாறு உள்ளது. “Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses”, (page: 52, Social Science, VII th Text book)
Scarce, scarcity ஆகிய சொற்களுக்கு பற்றாக்குறை என்ற எளிய மொழிபெயர்ப்பிருக்க ‘கிடைப்பருமை’ என்ற சொல் ஏன்? கிடைப்பதற்கு அரிய/ அருமையான என்ற பொருளில் ‘கிடைப்பருமை’ என்று குழந்தைகளுக்கு வழங்குவதன் நோக்கம் விளங்கவில்லை. எத்தனை ஆசிரியர்கள் இதன் பொருளை மாணவர்களுக்கு உணர்த்தினார்கள் என்ற அய்யமும் கூடவே எழுகிறது”.
வரையறைகள் தேவைதானா? என்ற முந்தைய பதிவின் இணைப்பு கீழே:
http://musivagurunathan.blogspot.com/2018/01/blog-post_22.html?m=1
இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் பாடபேதம் இருப்பதை உணர முடிகிறது. இதை பொருளியல் அறிந்தவர்கள்தான் விளக்க வேண்டும்!
அமர்த்தியாகுமார் சென், அமர்த்தியா சென், A.K.சென் (பக். 163, 165) என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. இதை விடுத்து அமர்த்தியா சென் என்ற நடைமுறையில் உள்ளதை பயன்படுத்தும் முறையே சரியெனப்படுகிறது.
சொராஸ்வீரிய மதம் (பக். 160) அல்ல; ஜொராஸ்டிரியம் என்பதே சரியானது. இதைக்கூட கவனிக்காமல் விடுவது வருந்தத்தக்கது.
இலாபம், இயனல் ராபின்ஸ், இரயத்துவாரி, இரசாயனத்தாது என்றெல்லாம் மொழிக்கு முதலில் வராத சொற்களைக் கண்டெழுதுபவர்கள் வைப்பார் (வைப்பாறு) என்று எழுதுவதன் மர்மம் நமக்கு விளங்கவில்லை.
ஏர் இந்தியன் நிறுவனம் பன்னாட்டு விமானப் போக்குவரத்து (பக். 155) என்று எழுதப்படுகிறது. ஏர் இந்தியா (AIR INDIA) என்பதில் என்ன குழப்பம்? பாரதப் பிரதமர் என்று எழுதுவதன் பொருள் என்ன? காந்தி சொன்ன நோக்கமும், இப்போது பாரதம் என்பவர்களின் நோக்கமும் வேறு வேறாக அல்லவா இருக்கிறது?
இந்தியப் பொருளாதாரத்தின் பலம் கலப்புப் பொருளாதாரம் என்ற பத்தியில் “பொருளாதார தாராளமயமாக்கலின் விளைவாக தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதனால் தனியார் துறையும் பொதுத்துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்பட ஏதுவாகின்றது”, (பக். 155) என்று சொல்லப்படுகிறது. பொதுத்துறைகளில் பங்கு விலக்கல் / பங்கு விற்பனை அதிகமாவது, அரசு புதிய நிறுவனங்களைத் தொடங்காதது, தனியார் மயம் ஆகிய 1991 க்கு பிந்தைய நிலையில் கலப்புப் பொருளாதாரம் என்று சொல்வது பொருளற்றது. தமிழகத்தில் ‘சிப்காட்’ புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடாமல் நிலங்களைக் கையகப்படுத்தி தனியாருக்கு வழங்குவதையேத் தொழிலாகக் கொண்டுள்ளதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
உதாரணம் ஒன்று:
தொலைத்தொடர்புத் துறையில் பாரத் சஞ்சார் நிகம் லிட்., என்னும் பொதுத்துறை நிறுவனமும் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய தனியார் நிறுவனங்களும் சந்தையில் உள்ளன. 4 ஜி தொழில் உரிமம் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ள அரசு நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. இதுதான் ஒரே கட்டமைப்பில் இணைந்து செயல்படுவதா? கலப்புப் பொருளாதாரம் இன்று வழக்கொழிந்த ஒன்றுதானே!
பொதுத்துறையில் அரசின் பங்குகள் விலக்கல் / விற்பனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசின் பங்கு 49% க்கு வரும்போது தனியார் நிறுவனமாக ஆகிவிடுவது இயல்பு. இதற்கான கொள்கை மாற்றம் இல்லாத வரையில் பொதுத்துறை என்றோ கலப்புப் பொருளாதாரம் என்றே சொல்ல ஏதுமில்லை. ரயில்வே துறையும் தனியார் மயப்பாதையில் சென்றுகொண்டுள்ளது. பங்குகளை விற்க எதிர்ப்பு வருகிறபோது, அந்த நிறுவனத்தைச் சீரழித்துத் திவாலாக்கும் நடைமுறையை ஆளும் அரசுகள் பின்பற்றுகின்றன. (எ.கா) ஏர் இந்தியா, பி.எஸ்.என்,எல். வருங்காலத்தில் இவற்றின் பங்குகளை வாங்கக்கூட ஆளிருக்காது! ஏர்செல் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைதான் இவைகளுக்கும்.
மனித வள மேம்பாட்டுக் குறியீடு (HDI), வாழ்க்கைத்தரக் குறியீடு (PQLI), மொத்த மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) (பக். 147) ஆகியன சொல்லப்பட்டு அவற்றின் தர வரிசையை மறைத்து இந்தியா வளர்ந்த நாடு என்று சொல்லப்படுகிறது. இறுதியாக வேறொரு இடத்தில் HDI இல் இந்திய இடம் எடுத்துக் காட்டப்படுகிறது. 188 நாடுகளில் 131 வது இடத்திலிருக்கும் (2016) இந்தியாவை ஜி 20 இல் இருக்கும் ஒரே காரணத்திற்காக வளர்ந்த நாடு என்று சொல்லிவிட முடியுமா? விரைவான பொருளாதார வளர்ச்சியால் G 20 (பக்.149) –ல் இடம் என்பதன் உண்மை நிலை என்ன? இது வளர்ச்சியா? வீக்கமா?
“ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான், இந்தோனேசியா. இந்நாடுகளை முன்னேற்றமடையாத, வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய மற்றும் மூன்றாம் உலகநாடுகள் என்றும் அழைக்கலாம்”, (பக். 148) என்று சொல்வது ஏற்புடையதா? மனித வளக்குறியீட்டில் இவர்களது இடம் என்ன? இந்தியாவை மூன்றாம் உலக நாடு அல்ல என்று சொல்வதுதான் இதன் நோக்கமா?
முன்னேறிய நாடுகளின் இயல்புகளாகப் ((பக். 148) பட்டியலிடப்படுபவை பெரும்பாலும் பொருளியல் காரணிகள் (10). சமூக, பாலின சமத்துவம், நிலையான ஆட்சி ஆகிய இரண்டு மட்டுமே பிற காரணிகள். தொழில் வளர்ச்சி மட்டும் வளர்ச்சிக்கான அளவீடுகள் அல்லவே! இதைக்கொண்டு நம்மை முன்னேறிய நாடாக கற்பிதம் செய்வது சரியா?
‘இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு’ என்னும் தலைப்பில் திருவள்ளுவர், காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், J.C.குமரப்பா, V.K.R.V.ராவ், அமர்த்தியா சென் ((பக். 157-163) ஆகிய அறிஞர்கள் கருத்துகள் பாடநூலுக்கு மெருகூட்டுகின்றன. அமர்த்தியா சென்னுக்கு குறைவான இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஆய்வுகள் குறித்து இன்னும் கூடுதலாகச் சொல்லியிருக்கலாம். கார்ப்பரேட் பெருக்கத்தின் விளைவாக நாளுக்கு நாள் பெருகி வரும் பொருளியல் அறிஞர்கள் மத்தியில் மேற்கண்ட அறிஞர்களின் பொருளியல் பார்வை அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.
பொதுத்துறை, தனியார்துறை வங்கிகள் படத்தில் மாற்றி மாற்றிக் காட்டப்பட்டுள்ளன (பக். 179,180) பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் IDBI BANK உடன் சேர்த்துத் தனியார் வங்கிகள் என படத்தில் சுட்டப்பட்டுள்ளது.
பார்வை நூல்களில் தமிழ்நூல்கள் பட்டியல் இல்லை; அவசியம் கொடுக்கப்பட வேண்டும். ஜே.சி.குமரப்பா, அமர்த்தியா சென் போன்றோரின் நூல்கள் தமிழில் கிடைக்கின்றன. இவற்றை அறிமுகம் செய்வது தமிழில் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
‘இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்’ (பக். 191) என்றொரு பாடம் உள்ளது. மேம்பாட்டு அனுவங்கள் என்பதே சரியாக இருக்கும், அல்லது ‘இந்தியாவின் மேம்பாடு: அனுபவங்கள்’ என்றும் இருக்கலாம்.
“முதலீட்டு விலக்கம் முழுவதுமாக நடைமுறைப் படுத்தபடவில்லை”, (பக். 193) என்று சொல்பவர்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஏன் மறைக்க வேண்டும்?
“புதிய தொழிற்கொள்கையை ஜூலை 24, 1991 –ல் பாரத பிரதமர் அறிவித்தார்” (பக். 194) பாரதப் பிரதமர் ஏன்? இந்த நாளில் தொழிற்கொள்கை நடைமுறைக்கு வந்தது என்று சொன்னால் பரவாயில்லை. பிரதமர் அறிவித்தார் எனும்போது அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?
GST –ன் நன்மைகள் உள்ளது (பக். 200). தீமைகள் இல்லை. சரக்கு மற்றும் சேவை வரி என்பது பொதுப்பயன்பாட்டில் இருக்கும்போது பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்று மொழிபெயர்ப்பது ஏனோ? இங்கேயும் தனித்தமிழ் சிக்கல்! ஊரக சாலைகள் (பக். 219) ஊரகச் சாலைகளாதல் நலம்.
தமிழ்நாடு நிலவரைபடத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் இருதுண்டுகளாக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது (பக். 226). இடையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குச் சொந்தமான காரைக்கால் இருப்பினும் தமிழ்நாடு மாநில நாகப்பட்டினம் மாவட்ட நிலப்பகுதி துண்டாகவில்லை. தமிழ்நாட்டின் மிகநீளமான மாவட்டம் என்ற பெருமை நாகப்பட்டினத்திற்கு உண்டு! இடையில் துண்டாகாத தொடர் நிலப்பரப்பே நாகப்பட்டினம் மாவட்டம். எனவே நிலவரைபடத்தை மாற்றவேண்டும்.
காற்றாலை மின்னுற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் என்பதைத் தொடர்ந்து சொல்ல மறுப்பது ஏன்? (பக். 237, 238) சூரிய சக்தி மின்சாரத்தில் அட்டவணையில் முதலிடம் இருந்தும் “இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குவது”, சொல்வதும் ஏன்? (பக். 238)
பணமதிப்பிழப்பு போன்ற சமகாலப் பொருளியல் நிகழ்வுகள் பற்றியும் பாடநூல்கள் பேசியிருக்க வேண்டும். இந்திய, தமிழ்ச்சூழலில் அதற்கான சாத்தியங்கள் எப்போது ஏற்படும் என்று சொல்லத் தெரியவில்லை.
‘வளர்ச்சி’ குறித்த அரசின் கையேடாக பாடநூல் அமைவது நல்லதல்ல. மாணவர்களைச் சிந்திக்கவும் வைப்பதுதான் அதன் அழகு. நன்மை. தீமை என இருதரப்பையும் முன்வைத்து மாணவர்களது சிந்தனைத் தூண்டுவதே கல்வியின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். வளர்ச்சியின் பெயரால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை பேசியாக வேண்டும். இதுவும் பொருளியலில் ஒரு வகை என்பதை நமது ‘பொருளியல் அறிஞர்’களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ள காலமிது.
Leave a Reply