மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.05.2018) விடுத்துள்ள அறிக்கை:
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழகப் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்ற 25ம் தேதியன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூற சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் தமிழகப் போலீசார் அவரை உளுந்தூர்பேட்டை டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட அவருக்குப் போலீசார் உணவு, தண்ணீர்கூட அளிக்காமல் அலைக்கழித்துப் பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
வேல்முருகன் சிறையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரையில் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு மதிமுக தலைவர் வைகோ சிறைக்குச் சென்று நேரில் வலியுறுத்திய பின்னரே உண்ணாவிரத்ததை முடித்துக் கொண்டார். இதனால் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு தற்போது ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தமிழக அரசும், காவல்துறையும் வேல்முருகன் மீது அரங்கேற்றி வரும் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், அவர் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று உடனே அவரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply